திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : ஞாயிறு, 6 ஜனவரி 2019 (15:11 IST)

வலிக்கு மருந்து, சுகம், நினைவுகள்... அள்ளிதரும் இசைப்புயல் பிறந்த தினம் இன்று

தனது இசையால் உலகை வசப்படுத்தி எல்லோரையும் மகிழ வைத்து வரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பிறந்த தினம் இன்று. 
 
இன்றைக்கு உலகில் போற்றப்படும் தமிழர்களில் மிக முக்கியமானவர் ஏ.ஆர்.ரகுமான். உள்ளூர் மேடையாக இருக்கட்டும், ஆஸ்கர் மேடையாக இருக்கட்டும், எவ்வளவு பெரிய பாராட்டு விழா நடந்தாலும் அமைதியாக புன்சிரிப்புடன் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று ஒற்றை வரியில் கூறி தன்னடக்கத்தோடு எல்லாவற்றையும் எதிர்கொள்வார் ஏ.ஆர்.ரகுமான்.  
 
கீ போர்டு பிளேயராக இருந்த ஏ.ஆர்.ரகுமான் 1992 ஆம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக இந்த உலகுக்கு அறிமுகமானார். அதில் புது வெள்ளை மழையாக அவரது ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை நனைத்தன. 
யார் இந்த பையன் இப்போ அற்புதமாக இசையமைத்துள்ளார் என இந்தியா முழுவதுமே கேள்வி கேட்டார்கள். அது ஏ.ஆர்.ரகுமான் என்ற 22 வயது இளைஞன் என்பது அப்போது எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. 
 
அதன்பிறகு கருத்தம்மா, கிழக்கு சீமையிலே, பம்பாய், இந்தியன் என அவர் இசையமைத்த பல படங்கள் இந்தியாவை தாண்டி உலக அளவில் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தன. கிராமத்து ஸ்டைல் என்றால் கிழக்குச்சீமையிலே, கருத்தம்மா இந்த இரண்டு படங்களின் பாடல்களை இன்று கேட்டாலும் கண்ணீர் கோர்க்கும் எல்லோருக்கும்.  
பாலிவுட்டில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்த ரஹ்மான், அங்கும் பெரும் புகழ் பெற்றார். தமிழ், இந்தி, ஆங்கிலம் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருதுபோன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். 
 
ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும், பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார்.
இவரது பாடல்கள் கேட்டவுடன் பிடிக்கும் என்று சொல்லவில்லை கேட்க கேட்க அப்படியே மெய்மறக்க வைக்கும் அதுதான் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டைல். இவர் தமிழகம் தாண்டி பாலிவுட் ஹாலிவுட் டோலிவுட் என எல்லா திரை துறைகளிலும் புயலாக சுழன்று அடித்தார். இதனால் ஆஸ்கர் விருது வென்றார். 
 
அப்போது அந்த விருது வாங்க மேடையில் ஜாக்கிசானுடன் கைகோர்த்து நின்றிருந்த ஏ.ஆர்.ரகுமான். அவரது நாவில் தவழ்ந்தது எல்லா புகழும் இறைவனுக்கே என்ற தமிழ் வார்த்தைகள்தான்.  உலகமே வேடிக்கை பார்த்தது. தமிழர்களை நெகிழ வைத்த அந்த தருணம், இந்தியாவை பெருமைபட வைத்த அந்த தருணம் ஏ.ஆர்.ரகுமான் பேசியது தமிழில் தான். 
இவரது இசையில் உருவாகும் ஒவ்வொரு பாடல்களுமே ஏதோ ஒரு வகையில் எல்லோரையும் சுகம் ஆக்குகிறது காதலர்களுக்கு சுகமாகவும், வலியை மறக்கும் மருந்தாகவும், பெரியவர்களுக்கு தங்கள் நினைவுகளை சுமக்கும் பெட்டகமாகவும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் இன்றும் தொடர்கின்றன. 
 
சுதந்திர தாகத்தை ஊட்டும் இவரது பாடல்களை மெய்சிலிர்க்காதவர்கள் யாரும் இல்லை. இசையால் உலகை வென்றவர் தன்னடக்கத்தோடு தன்னையும் சேர்த்து வென்றார். இசை புயலாக இன்றும் சுழன்றடித்துக் கொண்டிருக்கும் அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.