தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சு, கண்ணப்பா திரைப்படம் மூலம் இந்திய சினிமா வரலாற்றுக்கு மிகப்பெரிய காவியத் திரைப்படத்தை கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் முதல் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவரும் இந்திய அளவில் புகழ்பெற்று இருப்பதோடு, படத்தின் அனைத்து பணிகளும் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
அந்த வகையில், பிரபாஸ்,மோகன் லால்,சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி இந்திய நட்சத்திரங்கள் நடிக்கும் கண்ணப்பா திரைப்படத்தில் மற்றொரு முன்னணி இந்திய நட்சத்திரமான பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இணைந்துள்ளார்.
மேலும், கண்ணப்பா மூலம் தெலுங்கு திரையுலகில் கால் பதிக்கும் அக்ஷய் குமார், தனது முதல் தெலுங்குப் படத்தில் புதிய பரிமாண நடிப்பை வெளிப்படுத்தி புதிய பார்வையாளர்களுக்கு புதிய அனுவபத்தை கொடுக்க தயாராகியுள்ளார்.
நடிகர் அக்ஷய் குமாரின் கதாபாத்திரம் கண்ணப்பாவின் கதைக்கு மிக முக்கியமானதாக இருப்பதால், அவருடைய தோற்றம் மற்றும் நடிப்பு பார்வையாளர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மற்றும் குறிப்பிடத்தக்க பகுதி உள்ளிட்ட முக்கியமான காட்சிகளை ஐதராபாத்தில் படமாக்குவதில் முக்கிய கவனம் செலுத்தி வரும் படக்குழுவுடன் நடிகர் அக்ஷய் குமார், ஐதராபாத் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
இது குறித்து நடிகர் விஷ்ணு மஞ்சு கூறுகையில்,
”அக்ஷய் சாருடன் படப்பிடிப்பில் இருப்பது த்ரில்லாக இருக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ஒன்றை படமாக்க தயாராக இருக்கிறோம். திறமையான நடிகர் எங்களுடன் இணைந்திருப்பது மிகப்பெரிய கவுரவம்.
அக்ஷய் சாரின் வருகை கண்ணப்பா திரைப்படத்தை உண்மையிலேயே பான் இந்தியா திரைப்படமாக்கியுள்ளது.” என்றார்.
படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், இந்த படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், இந்த படத்தில் மோகன்லால் மற்றும் பிரபாஸ் மற்றும் பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஷெல்டன் சாவ், ஆக்ஷன் இயக்குநர் கெச்சா கம்பக்டீ மற்றும் நடன மாஸ்ட்ரோ பிரபுதேவா போன்ற நட்சத்திரங்கள் உட்பட, ஈர்க்கக்கூடிய நடிகர்கள் மற்றும் குழுவினர் உள்ளனர்.
மனதைத் தொடும் கதைக்களத்துடன் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் உருவாகும் கண்ணப்பா கடந்த ஆண்டு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர கோவிலில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதோடு, அதன் முதல் கட்டப்படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.