வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: திங்கள், 12 ஜூன் 2017 (15:02 IST)

ரஜினியை தொடர்ந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா?: விருது விழாவில் விவசாய அரசியல்!

ரஜினியை தொடர்ந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா?: விருது விழாவில் விவசாய அரசியல்!

தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அதோ போல நடிகர் விஜயும் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.


 
 
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என ரஜினியை போல ரொம்ப காலமாக தேர்தல் வரும்போது எல்லாம் கிசுகிசுக்கப்படும். இந்நிலையில் நேற்று நடிகர் விஜய் விருது வழங்கும் விழா ஒன்றில் பேசியது அவர் அரசியலுக்கு வருவதற்காகத்தான் இப்படி பேசியிருப்பார் என சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
 
பிஹைன்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய்-க்கு Samrat of South Indian Box Office என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக்கொண்ட விஜய் தன் படங்களின் இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய விஜய் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசினார். நான் நன்றாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன். நாம் அனைவருமே நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் விவசாயிகள் இன்று நன்றாக இல்லை. உழைப்புக்குக் கிடைத்த பலனாக இங்கு பலருக்கும் விருதுகள் கொடுக்கப்பட்டன. ஆனால், எந்தவொரு பலனுமே கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது.
 
உணவு, உடை, இருப்பிடம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். முதலிடத்தில் இருக்கும் உணவைக் கொடுப்பவர் விவசாயி. பசியை எளிதாகக் கடந்துவிடுவதால் தான் நாம் அவர்களைப் பற்றி நினைப்பதில்லை என நினைக்கிறேன். காசு கொடுத்தால் கூடச் சாப்பிடுவதற்கு எதுவுமே கிடைக்காது என்ற நிலை வந்தால் மட்டுமே நாம் விவசாயிகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.
 
அவர்களுடைய நிலையைப் புரிந்து கொள்வது அவசியம் என்பதை விட அவசரமும் கூட. இப்போது கூட நான் முழித்துக் கொள்ளவில்லை என்றால், அடுத்த சந்ததிக்கு அதுகூடக் கிடைக்காது. ஒரு ஜவுளிக்கடை முதலாளி இன்னொரு ஜவுளிக்கடைக்குச் சென்று துணி எடுக்க முடிகிறது, ஒரு நகைக்கடை முதலாளி இன்னொரு நகைக்கடைக்கு சென்று நகை வாங்க முடிகிறது.
 
ஆனால், ஒரு விவசாயி மட்டும் தான் ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறான். ஏனென்றால் இலவச அரசிக்காக. வல்லரசு வல்லரசு என்று பேசிக்கொண்டிருக்கிறோம். வல்லரசு ஆவதெல்லாம் இருக்கட்டும். முதலில் நல்லரசு கொடுங்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாருங்கள் என நடிகர் விஜய் பேசினார்.