1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: புதன், 11 ஜூன் 2014 (11:51 IST)

நாயர், மேனன்.... குழப்பதை தீர்த்த நடிகைகளின் சாதிப் பெயர்கள்

நவ்யா நாயர், பார்வதி மேனன் என்று நடிகைகளின் பெயருடன் சாதி இடம்பெறுவதை தமிழகத்தில் சில இயக்குனர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியில் நவ்யா நாயரின் பெயர் நவ்யா என்று மட்டுமே டைட்டில் கிரெடிட்டில் இடம்பெற்றது.

கேரளாவில் ஈ.கே.நாயனார், இஎம்எஸ் நம்பூதிபாடு என்று பொதுவுடமை கட்சியின் தலைவர்களின் பெயர்கள் சாதியுடன்தான் குறிப்பிடப்படுகின்றன. அங்கு மழை மாய்ந்து போனதாக தகவல் இல்லை. 
 
பெயருடன் சாதியை சேர்த்துக் கொள்வது கேரளாவின் கலாச்சாரம். இந்த சாதிப் பெயர்தான் உத்தம வில்லன் படத்தில் ஏற்பட்ட பெயர் குழப்பத்தை தீர்த்து வைத்தது.
உத்தம வில்லனில் பார்வதி மேனன் (பூ, மரியான் படங்களின் நாயகி) நடிக்கிறார். அவருடன் நடிக்கும் அரை டஜன் நடிகைகளில் ஒருவர் பார்வதி நாயர். பார்க்கவும் அசப்பில் ஒன்று போல் இருப்பதால் பெயர் குழப்பத்தில் தவித்தது உத்தம வில்லன் டீம்.
 
கடைசியில் பார்வதி டெலிட் செய்து நாயர், மேனன் என்று அழைக்க ஆரம்பித்தார் படத்தை இயக்கும் ரமேஷ் அரவிந்த். அதன் பிறகே பெயர் குழப்பம் நீங்கியது.
 
கமல் இதில் உத்தமன் என்ற சரித்திரக்கால நாடகக் கலைஞராகவும், மனோரஞ்சன் என்ற நிகழ்கால சினிமா நடிகராகவும் இரு வேடங்களில் வருகிறார். இதில் மனோரஞ்சனின் மகன் புதுமுகம் அஸ்வினை காதலிப்பவராக வருகிறார் பார்வதி நாயர். 
 
ஜிப்ரான் இசையில் உருவாகிவரும் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும், கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனலும் இணைந்து தயாரிக்கின்றன.