1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Updated : வியாழன், 10 ஏப்ரல் 2014 (11:31 IST)

சீமான் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - தெலுங்கு அமைப்பு பதிலடி

தெனாலிராமன் படத்தில் கிருஷ்ணதேவராயரையும், தெனாலிராமனையும் கொச்சைப்படுத்தியிருப்பதாகக்கூறி தெலுங்கு அமைப்புகள் படத்தை தடை செய்யக்கோரி வருகின்றன. சென்சாரில் புகாரும் தரப்பட்டது. தெலுங்கு அமைப்பைச் சேர்ந்தவர்கள் வடிவேலுவின் வீட்டை முற்றுகையிடவும் முயன்றனர்.
அதனை கண்டித்து சீமான், வ.கௌதமன் போன்றோர் தெலுங்கு அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அந்த மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை நிறுவனர் ஆர்.பாலகுருசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது -
 
வடிவேலு ஒன்றும் எங்களின் எதிரி அல்ல. எங்கள் உணர்வுகளை ஜனநாயக வழியில் வெளிபடுத்தி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக படம் இல்லாமல் வடிவேலு இருந்தபோது சீமான் ஏன் அவரை வைத்து படம் எடுக்கவில்லை.
 

இன்று ‘தெனாலிராமன்’ படத்தை எதிர்ப்பது தெலுங்கு அமைப்புகள் என்றதும் சீமான் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளார். இன்று மட்டும் வடிவேலு தமிழன் ஆகிவிட்டார். கமலின் ‘விஸ்வரூபம்’ படத்துக்கும் நடிகர் விஜய்யின் ‘துப்பாக்கி’ படத்துக்கும் பிரச்சினை வந்தபோது சீமான் எங்கே சென்றிருந்தார். கமலும், விஜய்யும் தமிழர்கள் இல்லையா?.
எங்கள் உணர்வுகளை ஒடுக்கும் வகையில் மிரட்டல்கள் விடுக்கும் தொனியில் பேசி வந்தால் உங்கள் மிரட்டலுக்கு அடி பணிய மாட்டோம். நாங்கள் எதையும் சந்திக்க தயார். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஜனநாயக வழியில் போராடுவோம். சீமானுக்கு இதன்மூலம் எங்களுடைய கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.