1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. வெ.சுரேஷ் வெங்கடாச்சலம்
Written By சுரேஷ் வெங்கடாசலம்
Last Updated : புதன், 6 ஏப்ரல் 2016 (16:16 IST)

விஜயகாந்திற்கு எதிராகத் திரும்பும் நிர்வாகிகள்: உடைகிறதா தேமுதிக?

விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக எந்த கூட்டணிக்குச் செல்லும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் செல்வார் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவாகிவிட்டது என்றும் ஊடகங்களில் பேசப்பட்டது.


 

 
பழம் நழுவி பாலில் விழும் என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கவுள்ளதாக அறிவித்தார்.
 
இதனால் திமுக ஏமாற்றமடைந்தது. மக்கள் நல கூட்டணி தலைவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடித்தது. தேமுதிக-மக்கள் நல கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டன.
 
இந்நிலையில், திடீரென தற்போது தேமுதிகவின் கொள்கைப்பரப்புச் செயலாளர் சந்திரகுமார் உள்ளிட்ட சிலர் தற்போது விஜயகாந்திற்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர்.
 
அவர்கள் விஜயகாந்த், மக்கள் நல கூட்டணியுடன், கூட்டணி அமைத்ததை எதிர்த்தும், திமுகவுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வருகின்றனர்.
 
இதைத் தொடர்ந்து சந்திரகுமார் உள்ளிட்ட, விஜயகாந்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் அனைவரும் தேமுதிகவில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
 
இதைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த சந்திரகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
 
இது குறித்து சந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாங்கள் தெரிவித்த கருத்து குறித்து எங்களிடம் விளக்கம் கேட்கவில்லை, குறைந்த பட்சம் ஒரு நோட்டீஸ் கூட கொடுக்கவில்லை. எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியது எங்களை கட்டுப்படுத்தாது, அது செல்லாது. ஒட்டு மொத்த தேமுதிகவின் கருத்தைதான் நாங்கள் வெளிப்படுத்தினோம்.


 

 
எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் முறைப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அதன் பின்னர்தான் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்க முடியும். கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவிற்குதான் உண்டு.
 
பொதுக் குழுவில் தலைமை நிர்வாகிகள் 9 பேரும், உயர்மட்ட குழு நிர்வாகிகள் 14 பேரும் சேர்ந்துதான் எந்த முடிவையும் எடுக்க முடியும். முடிவு எடுக்கிற அந்த குழுவில் நாங்கள் 5 பேர் இடம் பெற்று இருக்கிறோம்.
 
அப்படி இருக்கும்போது எங்களை எப்படி அவர் நீக்க முடியும்? ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடிய அதிகாரம் உள்ள குழுவில் இருக்கும் எங்களை நீக்கும் அதிகாரம் விஜயகாந்திற்கு இல்லை. அவர் தன்னிச்சையாக நீக்க முடியாது.
 
பொதுக்குழுவை கூட்டித்தான் நீக்க முடியும். அதுவும் பதவி பொறுப்புகளில் இருந்து மட்டும்தான் நீக்க முடியும். அடிப்படை உறுப்பினர் என்பதில் இருந்து இருந்து நீக்க முடியாது. ஒழுங்கு நடவடிக்கை குழுவில் 23 பேர் இருக்கிறோம் இந்த குழுவின் பரிந்துரையின் பேரில்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
 
எங்களுக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்களையும் வரவழைத்து பேச வைத்துள்ளனர். எங்களிடத்தில் என்ன தவறு இருக்கிறது?. பணம் பெற்றுக் கொண்டு விலை போய்விட்டதாக எங்கள் மீது அவதூறு பரபரப்பப்படுகிறது. நாங்கள் பணத்திற்கு விலை போகவில்லை.
 
ஏற்கனவே கட்சியில் அதிருப்தி நடவடிக்கையில் ஈடுபட்டு அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீது ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை?. ஆனால், தற்போது ஏன் எங்கள் மீது மட்டும் இந்த அவசர நடவடிக்கை?
 
கட்சிதான் முக்கியம், தலைமைதான் முக்கியம் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்தில்லை. தேமுதிக தலைமை, தலைவர் விஜயகாந்த் இடமிருந்து அண்ணி பிரேமலதாவிடம் முழுவதுமாக சென்று விட்டது. கட்சி கேப்டனின் கட்டுப்பாட்டில் இல்லை. கூட்டணியை உருவாக்கியதும் பிரேமலதாதான். அதனால் கட்சி அதள பதாளத்திற்கு சென்றுவிட்டது" என்று கூறினார்.
 
இந்த குற்றச்சாட்டுகளை விஜயகாந்த் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆயினும் இது விஜயகாந்திற்கு பெரும் சவாலாக இருக்கும்.
 
தற்போதுள்ள சூழலில் "விஜயகாந்த்தான் தனது தலைவர் என்றும் தேமுதிக கரைவேட்டியைத்தான் நான் கட்டுவேன்" என்று சந்திரகுமார் கூறினாலும் தேமுதிக உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 
சந்திரகுமார் செய்தியாளர்களின் ஒரு கேள்விக்கு பதில் அளித்துப் பேசுகையில், "விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியில் இருந்து வெளியேறி திமுகவில் இணையவேண்டும்" என்று கூறினார்.
 
சந்திரகுமாரின் இந்த விருப்பம் நிறைவேறப்போவதாக தெரியவில்லை. எனவே அவர் தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து, தேமுதிகவில் இருந்து வெளியேறி புதிய கட்சியைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், திமுகவுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திப்பதற்கு வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
 
சந்திரகுமார் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றும் அதற்காக திமுகவுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்றும் கூறிவருகிறார். எனவே புதிய கட்சிக்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது. அவ்வாறு அவர் புதிய கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும் தேமுதிகவை உடைத்து திமுகவில் இணைவார் என்று கூறப்படுகின்றது.
 
இதனால் தேமுதிகவின் பலம் தற்போது உள்ள நிலையில் இருந்த சரிவடையக்கூடும் என்று பேசப்படுகின்றது. இதை விஜயகாந்த் எப்படி சமாளிக்ப் போகிறார? இதனால் தனது வெற்றி வாய்புக்கு ஏதேனும் பின்னடைவு ஏற்பட வாய்பிருக்கிறதா என்பதை ஆராய்ந்து தனது பலத்தை பெருக்குவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுவார் என்று சொல்லப்படுகின்றது.
 
எது எப்படியாயினும், 2016 சட்டமன்ற தேர்தல் இதற்கு முந்தய தேர்தலில் இருந்து வேறுபட்டதாக, பரபரப்புடன் கூடிய பலமுனைப் போட்டியாக அமையும் சூழல் உருவாகியுள்ளது என்பதும் விஜயகாந்திற்கு இது சவாலாக அமையும்.

விஜயகாந்த் என்ற பழம் திமுக கூட்டணி என்னும் பாலில் விழாமல் போனது, ஆனால் சந்திரகுமார் எனற பழம் நிச்சயம் கலைஞரின் பாலில் விழும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.