வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2017 (16:44 IST)

சாலை ஒரு விஷுவல் விருந்தாக இருக்கும் - சாலை பட இயக்குனர் சார்லஸ் பேட்டி

முகிலன் சினிமாஸும், தங்கத்துளசி புரொடக்‌ஷன்ஸும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு சாலை என்று பெயரிட்டுள்ளனர்.  நஞ்சுபுரம், அழகு குட்டிச் செல்லம் ஆகிய படங்களின் இயக்குனர் சார்லஸ் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி சாலை படத்தை இயக்கியுள்ளார்.

 
சென்னையிலிருந்து காஷ்மீர் சென்ற ஒருவன் பற்றிய திகில் கதைதான் படம். காஷ்மீரில் நடந்த படப்பிடிப்பு குறித்த  அனுபவங்களை சார்லஸ் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
 
காஷ்மீர் அனுபவம் பற்றி சொல்லுங்க?
 
சாலை படம் முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள அசாதாரண சூழலில் காஷ்மீரில்  சுற்றித் திரிவது  போல் காதலர்கள் கற்பனையில் கூட கனவு காண அஞ்சுவார்கள்.. இந்தச் சூழலில் காஷ்மீர் பகுதியில் 45 நாட்கள் பனி கொட்டிக்  கிடக்கும் நிலப்பகுதியில் படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்திருக்கிறோம்.
 
காஷ்மீர் இந்தப் படத்தின் கதைக்கு தேவைப்பட்டதா?
 
காஷ்மீர் என்ற பனிபொழியும் வெள்ளை தேசத்துக்கு இந்த படத்தில் மிக முக்கியமான பங்கு இருக்கிறது. இந்த படம் காஷ்மீரில்  எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி நிச்சயம் வரும். கதைதான் அதற்கு காரணம்.
 
படத்தின் கதை என்ன?
 
சாலை  படம் ஒரு சைக்கலாஜிக்கல்த்ரில்லர். இதை ஒரு ரோடு மூவி என்றும்  கூறலாம். ஒரு பயணம் என்று இதைச்சொன்னாலும், படம் ஒரு தத்துவார்த்தமான முடிவைக் கொண்டது. எந்தவிதமான பயணத்தை ஒருவன் தன் வாழ்வில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும்  படம் சொல்லும்.
 
காஷ்மீர் இந்தக் கதைக்கு தேவைப்பட்டதா?
 
இந்தத் திகில் படத்துக்கு பனி படர்ந்த நிலப்பகுதி முக்கிய பின்னணியாக மட்டுமல்ல ஒரு பாத்திரம் போலவே அமையவேண்டும். அதற்காகவே நாங்கள் காஷ்மீர் போவது என்று முடிவு செய்தோம்.
 
இந்த முடிவு நிறைய சிரமங்களை ஏற்படுத்தியிருக்குமே?
 
காஷ்மீருக்கென்று தனி விமான தளம் கிடையாது. ராணுவத்தின் விமானதளம்தான் காஷ்மீரில் உள்ள ஒரே விமான தளம்.  லடாக், ஜம்மு, காஷ்மீர் என மூன்று  மாவட்டங்கள் அடங்கிய பகுதிகள் சேர்ந்ததுதான் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் என்று அழைக்கப்படுகிறது. இதில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி மிகவும் பதற்றமான பகுதியாகும். நாங்கள் அரசின் முறையான அனுமதி  பெற்றுத்தான் படப்பிடிப்பு  நடத்தினோம். என்றாலும் கத்தியின் மேல் நடப்பது போல் தான் ஒவ்வொரு நாளும் பயமாக  பதற்றமாக இருந்தது.
 
கொஞ்சம் விவரமாக சொல்ல முடியுமா?
 
அனுமதி கிடைத்து விட்டதே என்று ஊரில் போய் இறங்கினால் ஊர் முழுக்க ஆயுதம் தாங்கிய ராணுவ வீரர்கள் அதுவும் பத்தடிக்கு ஒருவர் சுற்றிலும் துப்பாக்கிகளுடன் நிற்கிறார்கள். இப்படி ஆரம்பமே பீதியைக் கிளப்பியது. அது மட்டுமல்ல அந்தப்  பகுதியில் எப்போது தீவிரவாதிகள் சார்ந்த பிரச்சினை வெடிக்கும் என்று தெரியாது என்றும் சொன்னார்கள். திகிலில் உறைந்து  விட்டோம். இந்த பதட்டத்துக்கு நடுவில்தான் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.
 
படம் எப்படி வந்திருக்கிறது?
 
நிச்சயம் சாலை நான் எதிர்பார்த்த மாதிரியே பிரம்மாண்டமான படமாக வந்திருக்கிறது. சாலை ஒரு விஷுவல் விருந்தாக  இருக்கும்.