வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2016 (17:13 IST)

எனக்குத் தெரிந்தது நடிப்பு மட்டுமே - சமந்தா பேட்டி

திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் சமந்தா. அதேபோல் சமூக சேவைகளில் செய்வதிலும் அவர் விட்டுக் கொடுப்பதில்லை. இது குறித்து அவர் அளித்த பேட்டி...

 
திருமணம் நடக்கவிருப்பதால் படங்களை தவிர்ப்பதாக கூறப்படுகிறதே?
 
இதுபற்றி பலமுறை கூறிவிட்டேன். திருமணத்துக்குப் பிறகும் நான் தொடர்ந்து நடிப்பேன். எனக்குத் தெரிந்தது நடிப்பு மட்டுமே. நாக சைதன்யாவுக்கும் நான் தொடர்ந்து நடிப்பதில்தான் விருப்பம்.
 
தமிழில் அவ்வளவாக படங்கள் ஒப்புக் கொள்ளவில்லையே?
 
தமிழில்தான் மூன்று படங்களில் நடிக்கிறேன். தொடர்ந்து தமிழில் நடிப்பேன்.
 
தமிழில் என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?
 
தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். விஷால் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறேன்.
 
சமூக சேவைகளில் ஆர்வம் காட்டுகிறீர்களே ஏன்?
 
சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
 
சமூக சேவை குறித்து உங்கள் பார்வை என்ன?
 
ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஆதரவு இல்லாத ஏழைகளுக்கு ஒதுக்கி அவர்களுக்கு உதவ வேண்டும். சமூகத்தில் எல்லோருமே சம்பாதிக்கிறார்கள். சிலருக்கு லட்சங்களிலும், இன்னும் சிலருக்கு கோடிகளிலும் வருமானம் வருகிறது. சம்பாதிக்கும் தொகை அனைத்தும் தனக்கே சொந்தம் என்று நினைப்பது சுயநலம். அந்த பணத்துக்கு மதிப்போ மரியாதையோ கிடையாது. அதில் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு பிரித்து கொடுப்பதில்தான் பொது நலமும் சந்தோஷமும் இருக்கிறது. சமூகத்தில் நிறைய மக்கள் அடிப்படை வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை தூக்கி விட வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
 
சமூக சேவையால் உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது?
 
சமூக சேவைகள் செய்யும் போது கிடைக்கும் திருப்தியே தனி. மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வதில் கிடைக்கும் சந்தோஷத்தை நான் அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கிறேன். ஏழைகள் பசியை தீர்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை. சமூக சேவைகளில்தான் எனக்கு மன அமைதி கிடைக்கிறது. உதவிகள் செய்யும்போதுதான் நம்மீதே நமக்கு அளவு கடந்த மரியாதை ஏற்படுகிறது. இந்த விஷயத்தை நான் தெரிந்து வைத்து இருப்பதால்தான் சமூக சேவைகளில் ஆர்வமாக ஈடுபடுகிறேன்.