வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2015 (06:26 IST)

எதிரிகள் தொடர்பில் அவதானமாக இருப்போம்

இலங்கையை ஆளும் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் 69-வது ஆண்டு மாநாடு கொழும்பிலுள்ள அதன் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில், அதன் போட்டிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஒருவர் கலந்துகொண்டிருந்த முதலாவது சந்தர்ப்பம் இது என்று இங்கு பேசிய மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

'நாட்டில் புதிய கலாசாரத்தை உருவாக்கிய வரலாற்று நாளாகவே இன்றைய தினத்தை நான் பார்க்கின்றேன்' என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

'இது தான் நாம் சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்க வேண்டிய அரசியல் கலாசாரம். நமது தேசிய அரசாங்கத்தில் சகலரும் இணைந்துக்கொண்டுள்ளனர். இதனை வெற்றிகரமாக கொண்டு செல்ல சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றும் கூறினார் இலங்கை ஜனாதிபதி.

நல்லாட்சியை நோக்கிய பயணத்தை தடுக்கும் முயற்சிகளை முறியடித்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்று கூறிய சிறிசேன, 'எவ்வாறாயினும் எதிரிகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம், (அவர்கள்) பின்னவாங்கியுள்ளார்கள் என்று எண்ணவும் வேண்டாம்' என்றும் தெரிவித்தார்.

'நம் எல்லோருக்கும் எதிரி யார் என்பது நன்றாக தெரியும். இதன்படி நாம் அவர்கள் தொடர்பாக அவதானமாக இருப்போம்' என்றும் அவர் கூறினார்.

'ஒருபக்கம் ஈழம் தொடர்பாக பேசுவோர் கடலுக்கு அக்கரையில் இருந்துகொண்டு நாட்டை பிளவு படுத்த இன்னும் முயற்சிக்கையில், மற்றைய பக்கம் கடந்த ஆட்சியில் செயற்பட்ட சிலர் நாம் செல்லும் பாதையை மாற்றியமைக்க முயற்சிக்கின்றனர். இது முடியாத முயற்சியாக இருப்பினும் நாம் அந்த விடயம் தொடர்பாக 24 மணித்தியாலமும் கவனமாக இருக்க வேண்டும்' என்றும் மைத்திரிபால சிறிசேன தெரித்தார்.