1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (20:58 IST)

இலங்கையை இந்தியாவின் மாநிலமாக மாற்ற முயற்சி - விமல் வீரவன்ஷ குற்றச்சாட்டு

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சிபா (Comprehensive Economic Partnership Agreement (CEPA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் விரிவான பொருளாதார கூட்டுறவுக்கான ஒப்பந்தம் ஏற்பட்டால் அதனால் இலங்கை மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய அழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
 

 
வியாழனன்று மாலை கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது அந்தக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஷ இதனைத் தெரிவித்தார்.
 
வர்த்தகம் தொடர்ப்பாக இந்திய அரசாங்கத்துடன் சிபா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக தகவல்கள வெளிவந்துள்ளன.
 
இந்த ஒப்பந்தம் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கையெழுத்திடுவதற்குத் தயாரானபோது முன்வைக்கப்பட்ட எதிர்ப்புக்கள் காரணமாக அது பின்போடப்பட்டதாக தெரிவித்த விமல் விரவன்ஷ, ஆனால் தற்போதைய ரணில் அரசாங்கம் அதனை அமல்படுத்தத் தயாராகி வருவதாக குற்றம் சாட்டினார்.
 
இவ்வாறான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு இலங்கை அரசியல் யாப்பின்கீழ் பிரதமருக்கு அதிகாரம் இல்லையென்று கூறிய விமல் விரவன்ஷ ஜனாதிபதியே அதனை மேற்கொள்ள வேண்டுமென்று தெரிவித்தார்.
 
சிபா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டால் இந்திய வர்த்தகர்களுக்கு தடையின்றி இலங்கைக்குள் வந்து வியாபாரங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுமென்று தெரிவித்த விமல் வீரவன்ஷ, இதன்காரணமாக இலங்கைக்குள் சுயதொழில் ஈடுபடும் சிறுவர்த்தகர் முதல் பெருவர்த்தக நிறுவனகள் வரை சகல இலங்கையர்களுக்கும் தமது தொழில்களை, வர்த்தக வாய்ப்புகளை இழக்கும் அபாயம் ஏற்படுமென்றும் இலங்கை வர்த்தகர்களை புறந்தள்ளிவிட்டு அவர்களின் இடத்தை இந்தியர்கள் எளிதில் கைபற்றிக்கொள்வார்களென்றும் குற்றம் சாட்டினார்.
 
தொழில், வர்தகம் தவிர கல்வி, சுகாதார, சட்டத்துறை உட்பட பல துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இந்தியர்களும், இந்திய நிறுவனங்களும் இலங்கைக்கு வந்து தமது சேவைகளை தடையின்றி புரிவதற்கு இந்த ஒப்பந்தத்தின் முலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ஷ தெரிவித்தார்.
 
இதன் விளைவாக இலங்கையைச் சேர்ந்த பல்துறை நிபுணர்களும் தமது தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயம் இருப்பதாகக் கூறிய விமல் விரவன்ஷ இதனை இலங்கை மக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென இலங்கை மக்கக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.
 
இந்த ஒப்பந்தத்தின்கீழ் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு வரும் இந்தியர்களுக்கு ஒரு இலங்கைக் குடிமகனுக்கு வழங்கப்படும் சகல உரிமைகளும் வழங்கப்படுவதாகவும், இதன் மூலம் இந்தியர்களுக்கு இலங்கையில் குடிஏறுவதற்கான அனுமதி வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டிய விமல் விரவன்ஷ இலங்கை என்கிற தனி நாட்டை, இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றியமைப்பதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
 
எனவே இந்த ஒப்பந்தத்தை தோற்கடிப்பதற்கு கட்சி பேதங்களை மறந்து சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார் விமல் வீரவன்ஷ.