வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2015 (06:00 IST)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஜெனீவா செல்கின்றனர்

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையினால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐநா மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளின் காலப் பகுதியில் இந்தக் குழு ஜெனிவாவில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்தக் குழுவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் தானும் ஜெனீவா செல்லவுள்ளதாகக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், ஏனைய தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஜெனீவா செல்லக் கூடும் என்றும் தெரிவித்தார்.

ஐநா மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை வெளியானதும், அடுத்த கட்டமாக அதுதொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அதன் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப்பதுடன், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு வழிபிறக்கும் என்பதே தங்களுடைய நிலைப்பாடு என்றும் சிவாஜிலிங்கம் கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலேயே தான் ஜெனிவாவுக்குச் செல்வதாகக் கூறிய சிவாஜிலிங்கம், இதுகுறித்து கூட்டமைப்பு மட்டத்தில் கூடிப் பேச்சு நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

வழமையாக இத்தகைய சந்தர்ப்பங்களில் தமது கட்சியின் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் ஆகியோரிடம் தெரிவித்துவிட்டே தான் ஜெனிவா சென்றுவந்துள்ளதாகவும், இம்முறையும் அவ்வாறே செல்லவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.