வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 3 மே 2015 (17:53 IST)

இலங்கை ஆட்சி மாற்றத்தை த.தே.கூ பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

இலங்கையின் வட கிழக்கில் பொதுமக்களுடைய காணிகளில் நிலைகொண்டிருக்கின்ற இராணுவத்தினர் அகற்றப்பட்டு, முழுமையான மீள்குடியேற்றம் இடம்பெற வேண்டும் என்று இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரியிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


 
பகிர்ந்தளிக்கப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அப்போதுதான் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வடுக்கள் மறைந்து, இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படும் என்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 
அமெரிக்க வெளியுறவுச் செயலருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஞாயிறன்று கொழும்பு தாஜ் ஹோட்டலில் நடைபெற்றபோதே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாக இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தவர்களில் ஒருவரும், கூட்டமைப்பின் பேச்சாளருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
 
இலங்கையில் ஆட்சி மாற்றத்துடன் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றச் சூழ்நிலையை சரியான முறையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள மனவடுக்களை மாற்றி, இனங்களுக்கிடையில் நல்லுறவும் இணக்கப்பாடும் ஏற்படுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் இந்தச் சந்திப்பின்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பனரிடம் தெரிவித்துள்ளதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.
 
சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையின் வடமாகாண நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்த விபரங்கள் அடங்கிய இரண்டு ஆவணங்களை வடமாகாண முதலமைச்சர் இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க வெளியுறவுச் செயலரிடம் கையளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தச் சந்திப்பின்போது, இனப்பிரச்சினைக்கு உடனடியாக ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் பற்றி தாங்கள் எடுத்துக் கூறியதாகவும், பொதுமக்களுக்குச் சொந்தமான பெருமளவு நிலப்பரப்பில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பது இடம்பெயர்ந்துள்ள மக்களின் முழுமையான மீள்குடியேற்றத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாகவும் தாங்கள் அவருக்கு எடுத்துக் கூறியதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
 
காணாமல் போனவர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்களும் இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.