இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழர்களை விடுதலை செய்: வைகோ ஆவேசம்


K.N.Vadivel| Last Modified செவ்வாய், 10 நவம்பர் 2015 (22:31 IST)
இலங்கைச் சிறைகளில் உண்ணாவிரத அறப்போர் நடத்தும் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
 
 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
 
இலங்கையில் சிங்கள அரசு ஈழத்தமிழர்களை மனிதாபிமானமின்றி துன்புறுத்தும் கொடுமைகளில் ஒன்றாக தமிழ் இளைஞர்கள் மீது பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டு,14 சிறைகளில் அடைத்து வைத்துள்ளது.
 
இச்சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் கடந்த மூன்று நாட்களாக விடுதலை கோரி உண்ணாவிரத அறப்போர் நடத்துகின்றனர். அவர்களை விடுதலை செய்யக் கோரி வவுனியாவில் நவம்பர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொது வேலை நிறுத்தம் நடைபெற இருக்கிறது. அந்தப் பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய அங்குள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும், சங்கங்களும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
 
அனைத்துலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, மனித உரிமைகளை நசுக்குகின்ற சிங்கள இனவாத அரசின் அடக்குமுறையை உலக நாடுகள் இப்பொழுதாவது உணர்ந்துகொண்டு இலங்கைச் சிறைச்சாலைகளில் பல ஆண்டுகளாக வாடி வதங்கும் ஈழத் தமிழர்களை விடுதலை செய்வதற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டிய கடமையைச் செய்ய வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார். 
 


இதில் மேலும் படிக்கவும் :