தமிழ் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லை: இலங்கை அரசு உறுதி

prison
Suresh| Last Updated: புதன், 28 அக்டோபர் 2015 (12:23 IST)
இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள 200 க்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது சாத்தியம் இமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

 
இது குறித்து இலங்கையின் தேசிய பேச்சுவார்த்தை அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது:–
 
"பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
 
இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள 200 க்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது சாத்தியம் இல்லை என்று பிரதமர் தெரிவித்தார். 
 
ஆனால், வழக்கு நிலுவையில் உள்ளவர்களும், காவல்துறையினரின் விசாரணையின் கீழ் உள்ளவர்களும் ஜாமீன் பெறலாம்.
 
இதற்காக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
 
இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் ஏராளமான தமிழர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
 
விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து, பின்னர் சரண் அடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில், தமிழ் கைதிகளில் 200 க்கும் மேற்பட்டோர் நீதி கோரி சிறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
 
இதைத் தொடர்ந்து, அவ்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அதிபர் சிறிசேனா உறுதி கூறினார். இதையடுத்து, கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :