வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (13:37 IST)

இந்தியாவைப் பார்த்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும்: சம்பந்தன்

இலங்கையின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்திருப்பது தற்காலத்திற்கு அவசியம் என்றும், இது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றும் இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.
 

 
இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சம்பந்தன், இலங்கை அரசை ஆதரிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் அனைத்து விவகாரங்களிலும் தாம் அரசாங்கத்தை ஆதரிப்போம் என்று சம்பந்தர் தெரிவித்தார்.
 
இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண அனைவருடனும் இணைந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாகவும், இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 
“தமிழர்களின் பிரச்சனைக்கு ஏற்கத்தக்க தீர்வு காண்பது நம் அனைவரின் முதன்மையான கடமை என்பதை நான் வலியுறுத்திக்கூற விரும்புகிறேன்”, என்றார் சம்பந்தர்.
 
மேலும், துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் பல்வேறு குயுக்தியான வழிகளைப் பயன்படுத்தி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசியல் கலாச்சாரம் சமீபகாலமாக அதிகரித்துவருவதாக தெரிவித்த சம்பந்தர், எதிர்தரப்பில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் இழுப்பதற்கான ஒரு வழியாகவும் இது பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தினார்.
 
“அண்டையில் இருக்கும் இந்தியாவில் 120 கோடி மக்களுக்கான அரசாங்கத்தில் 65 அமைச்சர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது” என்றார் சம்பந்தன்.
 
அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசியல் கலாச்சாரம் தேச நலனுக்கும், தேசத்தின் தேவைக்கும் எதிராக இருப்பதாகவும் இதிலிருந்து இலங்கை விடுபடவேண்டும் என்றும் அதேசமயம், தற்போதைய சூழலில் எப்பாடுபட்டேனும் தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டியது தவிர்க்கவே முடியாத அவசியம் என்பதையும் தான் உணர்ந்தே இருப்பதாகவும் சம்பந்தன் கூறினார்.
 
“எல்லோருமே அமைச்சர்களாக வேண்டும் என்கிற தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். புதிய அத்தியாயம் ஒன்றை நாம் துவக்க வேண்டும். அண்டை நாட்டில் (இந்தியாவில்) எத்தனையோவிதமான வேறுபாடுகள் இருந்தாலும் அரச கட்டமைப்பு என்று வரும்போது ஒரே அரசாக ஒன்றிணைந்து செயற்படும் நல்லதொரு உதாரணத்தை நாமும் பின்பற்ற முயலவேண்டும்”, என்றார் சம்பந்தன்.
 
மத்தியில் ஏராளமான அமைச்சர்களை கொண்டிருப்பதற்கு பதிலாக, இலங்கையை இரண்டு அல்லது ஐந்து பிராந்தியங்களாக்கி, அவற்றுக்கு அதிகபட்ச அதிகாரங்களை அளிக்கலாம் என்றும் நாடாளுமன்றத்தில் இருக்கும் மிகச்சிறப்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மிகச்சிறந்த முதலமைச்சர்களாகவும் அமைச்சர்களாகவும் இருக்க வல்லவர்கள் என்றும் அப்படிப்பட்டவர்களுக்கு அதிகபட்ச அதிகாரம் கொடுத்து (பிராந்தியங்களில்) ஆளவிடலாம் என்றும் சம்பந்தன் யோசனை தெரிவித்தார்.
 
“இந்தியாவில் 29 மாநிலங்கள் இருக்கின்றன. ஆனால் அது ஒரே நாடாக இருக்கிறது. ஒன்றுபட்டும் இருக்கிறது. இந்தியாவில் மக்களின் மொழி, கலாச்சார மற்றும் மத உரிமைகளை மதித்து, கவுரவித்து பாதுகாக்கும் வகையில் மாநில அரசுகள் உருவாக்கப்பட்டிருப்பதே இந்தியா ஒரே நாடாக இணைந்திருப்பதற்கு முக்கிய காரணம். அதே அணுகுமுறையை நாமும் கடைபிடிக்கவேண்டும்”, என்றார் சம்பந்தன்.