வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2015 (06:20 IST)

சர்வதேச விசாரணை தேவை இல்லை

இலங்கையில் போர்க் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையில்லை என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூறுகின்றார்.

மட்டக்களப்பு நகரில் இன்று ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களை சந்தித்த சந்திரகாந்தன், தற்போது ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் உள்ளக விசாரணையே பொருத்தமானது என்று தெரிவித்திருக்கின்றார்.

'விடுதலைப்புலிகளும் பெரிய அளவில் போர்க் குற்றங்களை புரிந்துள்ளார்கள்' என்றும், 'இராணுவத்தினர் போர்க் குற்றங்களை புரிந்தார்கள் என்பதற்கு அப்பால் அதற்கான சந்தர்ப்பம் தமிழர்களினால் தான் வழங்கப்பட்டிருந்தது' என்றும் சந்திரகாந்தன் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் இது போன்ற அழிவுகள் வராமல் தடுப்பதற்கான வழிகளை பார்க்க வேண்டுமே தவிர ஒரு சாரார் மட்டும் தண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கூறினார்.

'தற்போதைய சூழ்நிலையில் சிங்களவர்கள் மத்தியில் குரோதம் வளராத வகையில் தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று தெளிவாக எல்லோரும் எண்ணுகிறார்கள். இதன்படி, சர்வதேச விசாரணை என்பது தேவையில்லை என்று கருதுகின்றோம்' என்றும் சந்திரகாந்தன் தெரிவித்தார்.