முள்ளிவாய்க்காலில் வடமாகாண முதல்வர் அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் வடமாகாண முதல்வர் அஞ்சலி
Last Modified செவ்வாய், 19 மே 2015 (09:19 IST)
இலங்கை வடமாகாண சபையின் ஏற்பாட்டில் இலங்கை இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள், இறுதியுத்தம் நிகழ்ந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று திங்கட்கிழமை அமைதியான முறையில் தீபமேற்றி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்படது.


 
முள்ளிவாய்க்கால் பகுதியில் எந்தவிதமான நிகழ்வுகளும் மேற்கொள்ளக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவொன்றை மேற்கோள் காட்டி, முல்லைத்தீவு காவல்துறையினர் விடுத்திருந்த எச்சரிக்கை காரணமாக, இப்படியான நிகழ்வுகள் இன்று நடைபெறுமா என்பது குறித்து குழப்பமானதொரு நிலை நிலவியது.
 
ஆனால் முள்ளிவாய்க்கால் பகுதியில் திங்களன்று இலங்கை காவல்துறையினர் காணப்பட்ட போதிலும் அங்கே நடந்த அஞ்சலி நிகழ்விற்கு எந்தவித இடையுறையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை.
 
முள்ளிவாய்க்கால் பகுதியில் பேரணி நடத்தக் கூடாது என்றே நீதிமன்றம் தமிழ் மொழியில் வழங்கியுள்ள தனது தடையுத்தரவில் தெரிவித்திருப்பதை பிரதி காவல்துறை மாஅதிபரின் கவனத்திற்கு தான் கொண்டு சென்றதாக வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
 
அரசியல் நிகழ்வல்ல; அஞ்சலி நிகழ்வே
 
இன்றைய நிகழ்வு அரசியல் நிகழ்வல்ல என்றும், இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வே என்றும் எடுத்துக் கூறியதை அடுத்தே, காவல்துறையினர் அமைதி காத்ததாகவும், இன்றைய அஞ்சலி நிகழ்வு அமைதியாக நடந்து முடிந்ததாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார்.
 
யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இத்தகைய நிகழ்வு ஒன்று இடம்பெறாத வகையில் முன்னைய அரசாங்கத்தல் கடுமையான தடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த பின்னணியில், முதற் தடவையாக முள்ளிவாய்க்காலில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது
 
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது உயிரிழந்த பொதுமக்கள் பற்றிய உண்மை நிலையினை வெளிக்கொண்டுவரவும், அவர்களுக்கான நீதி வழங்கவும் பொருத்தமான நடவடிக்கைளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று இந்த அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
முள்ளிவாய்க்கால் கிழக்கு அரசினர் பாடசாலை மைதானத்தில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதான தீபத்தை ஏற்றி மலர்கள் தூவி முதலமைச்சர் விக்னேஸ்வரன் அஞ்சலி செலுத்தினார்.
 
 
இந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவரும் பிரதி அமைச்சருமாகிய விஜகலா மகேஸ்வரனும், வடமாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு மௌனமாக தீபமேற்றி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
 
சாதகமான சூழல் மாறுவதற்குள் விரைந்து செயற்படவேண்டும்
 
அங்கு உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், தற்போது நாட்டில் தோன்றியுள்ள சாதகமான அரசியல் நிலைமை மாற்றமடைவதற்கு முன்னர், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் அனைவரும் விரைந்து செயற்பட முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
 
விரைந்து செயற்படாமையும், கால நீடிப்பும், பிரச்சினைகளினதும், அவற்றுக்கான தீர்வுகளினதும் பரிமாணங்களை மாற்றி அமைக்கும் அபாயத்தைக் கருத்திற் கொண்டு செயலாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
 
இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுடனும், சர்வதேச சமூகத்துடனும் இணைந்து தமிழ்த்தேசியத்தின் அரசியல் அபிலாசைகளைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
 
இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்கின்ற இந்த சோகமயமான தினத்தில் இத்தகைய நடவடிக்கையே இலங்கையில் வாழ்கின்ற பல்லின மக்களுக்கிடையில் பரஸ்பர கௌரவத்துடன் கூடிய உண்மையான நல்லிணக்கத்தை உருவாக்க உதவும் என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.


இதில் மேலும் படிக்கவும் :