வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஜூன் 2015 (20:35 IST)

மறிச்சுக்கட்டி குடியேற்றம் தெளிவுபடுத்த கையெழுத்து நடவடிக்கை

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் எல்லையில் மறிச்சுக்கட்டி கிராமத்தில் குடியேறியுள்ள முஸ்லிம் குடும்பங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்துவதற்கான கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து சென்று பின்னர் திரும்பி வந்து மீள்குடியேறியவர்களே அந்தக் குடும்பங்கள், தவிர அவர்கள் புதிதாக வில்பத்து சரணாலயத்துக்குரிய காணிகளில் அத்துமீறி குடியேறவில்லை என்று ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்துக்கு விளக்கமளிப்பதற்கான கையெழுத்து நடவடிக்கை இன்று ஞாயிறன்று தொடங்கியது.
 
தென்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றில், வில்பத்து வனப்பகுதிக்குள்காடுகள் அழிக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் முஸ்லிம் மக்கள் குடியிருப்புகளை அமைத்து அத்துமீறி குடியேறியிருப்பதாக கூறியுள்ளார்.
 
இந்தப் பின்னணியிலேயே இந்தக் கையெழுத்து சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான ரிசாட் பதியுதீன் தலைமையில் மறிச்சுக்கட்டி கிராமத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
 
பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, வடமாகாண சபை உறுப்பினர்களான கே.ஜயதிலக்க, றிப்கான் பதியுதீன், முசலி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட உள்ளுர் மற்றும் வெளியூர் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், உலமா சபைத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள் ஊர் மக்கள் என்று பலதரப்பட்டவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
இதன்படி, நாடெங்கிலும் உள்ள பள்ளிவாசல்கள் ஊடாக அடுத்து வரும் 10 தினங்களில் இரண்டு லட்சம் கையெழுத்துக்கள் திரட்டப்படவுள்ளன.
 
மறிச்சக்கட்டி கிராமத்தின் உண்மையான நிலைமை, அதற்கு அப்பால் புத்தளம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள வில்பத்து வனப்பகுதியின் எல்லைக்கும் மறிச்சுக்கட்டி கிராமத்திற்கும் இடையில் உள்ள பிரதேசத்தின் உண்மையான நிலைமை என்பவற்றை தெளிவுபடுத்தும் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
 
பரம்பரை பரம்பரையாக மறிச்சுக்கட்டி கிராமப் பகுதிகளில் தாங்கல் வாழ்ந்து வந்ததாகவும், கடந்த 1990 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், யுத்தம் முடிந்ததன் பின்னர் தாங்கள் தமது கிராமங்களில் வந்து அரசாங்கத்தின் அனுமதியோடும் அரச உதவிகளுடனும் மீள்குடியேறி வசித்து வருவதாகவும் ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
தமது கிராமத்தில் யுத்த மோதல்களின்போது சேதமாகி திருத்தப்படாமல் பாழடைந்த நிலையில் இருக்கும் பழமைவாய்ந்த மூன்று பள்ளிவாசல்களும் பழைய குடிமனைகளில் காணப்படும் கிணறுகளும் பயன்தரு மரங்களும் தமது பூர்வீக இருப்பிடத்தின் சாட்சிகளாக இருக்கின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
 
தமது காணிகளுக்குரிய பழைய காணி உறுதிப் பத்திரங்களும் தங்கள் வசம் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
 
தாங்கள் இடம்பெயர்ந்திருந்த காலத்தில் வன நிர்வாக அதிகாரிகள் தமது கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசத்தை வனப்பகுதியாகப் பிரகடனப்படுத்தியிருந்ததாகவும், அதன் காரணமாகவே இப்போது பிரச்சினை எழுந்திருப்பதாகவும் மறிச்சுக்கட்டி கிராம மக்கள் கூறியுள்ளனர்.