தேர்தல் காலத்தில் மகிந்தவின் விசேஷச் சலுகைகளைக் குறைக்கக் கோரி வழக்கு

Last Modified வெள்ளி, 17 ஜூலை 2015 (16:22 IST)
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் காலப்பகுதியில் மகிந்த ராஜ்பக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உட்பட விசேட சலுகைகளை குறைக்கும்படி உத்தரவிடக்கோரி இலங்கை உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. 
நவசமசமாஜக் கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளரான வழக்கறிஞர் சேனக பெரேரா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள விசேஷப்பாதுகாப்பு உட்பட சலுகைகளைத் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திவருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதிக்கு இருநூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பல்வேறு விசேஷ சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவருவதாக குற்றம் சாட்டிய மனுதாரர் சேனக பெரேரா, இதன் முலம் ஏனைய வேட்பாளர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
 
அதே போன்று, முன்னாள் ஜனாதிபதி என்ற பதவிக்கு வழங்கப்பட்டுள்ள விசேஷ சலுகைகள் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாதென்று கூறியிருக்கும் அவர் இது தொடர்பாக புகார் செய்தபோது தன்னால் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கமுடியாதென்று தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளதாகவும் தெரவித்தார்.
 
எனவே தேர்தல்காலத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உட்பட விசேஷ சலுகைகளை குறைக்குமாறு தேர்தல் ஆணையாளர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உட்பட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு இந்த மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :