1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூன் 2015 (06:04 IST)

இலங்கையில் புதிய தேர்தல் நடைமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான நடைமுறையை மாற்றியமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


எனினும் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தற்போதுள்ள நடைமுறையின் கீழேயே நடைபெறும் என்று வெளியுறவுத் துறையின் பொறுப்பை தற்காலிகமாக கவனித்து வரும் அமைச்சர் அஜித் பெரேரே பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.

புதிய தேர்தல் நடைமுறையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எவ்வித மாறுதலும் இராது. அந்த எண்ணிக்கை 225 ஆகவே இருக்கும்.

எனினும் புதிய தேர்தல் நடைமுறையில் 125 இடங்கள் தொகுதி அடிப்படையிலும் இதர 100 இடங்களில் 75 இடங்கள் விகிதாசார அடிப்படையிலும் எஞ்சிய 25 இடங்கள் தேசியப் பட்டியலின் கீழான நியமனங்கள் மூலமும் நிரப்பப்படும்.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த பிரேரணையை அமைச்சரவை ஏற்றுக் கொண்டது எனவும் அஜித் பெரேரா கூறுகிறார்.

தற்போதுள்ள நாடாளுமன்றம் எந்நேரமும் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்படலாம் எனக் கருதப்படும் சூழலில் அமைச்சரவையின் இந்த முடிவு வந்துள்ளது.

ஆனாலும் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல் முழுமையாக விகிதாசார அடிப்படையிலேயே நடைபெறும் எனவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

இதேவேளை தேர்தல் நடைமுறையில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் குறித்து பல கட்சிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பல யோசனைகளையும் அமைச்சரவை நிராகரித்துள்ளது.