இலங்கையில் தற்கொலை செய்த செந்தூரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய மாணவர்கள்
இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி, கல்லூரி மாணவர் ஒருவர், யாழ்ப்பாணம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார். இவருக்கு அஞ்சலி செலுத்தும்பொருட்டு வட மாகாணத்திலுள்ள பள்ளிக்கூடங்கள் இன்று மூடப்பட்டன.
கொக்குவில் இந்து கல்லூரியில் 18 வயதான ராஜேஸ்வரன் செந்தூரன் என்ற மாணவர் பயின்று வருகிறார். இவர் சிறையில் வைக்கப்பட்டுள்ள இருநூறுக்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகளை, சிங்கள அரசு உடனடினயாக விடுதலை செய்ய வேண்டும் என்று தனது புத்தகத்தில் ஒரு கடிதத்தை எழுதி வைத்து விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார்.
"தமிழ் ஈழத்திற்கு விடுதலையைக் கொடு, ஒளியையூட்டு, அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி நல்லாட்சி அரசாங்கம் அனைத்து அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் ஒரு தமிழ் அரசியல் கைதிகளேனும் சிறையில் இருக்க முடியாது. இந்த அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டியதன் அவசியம் எனக்குப் புரிந்தும் கூட இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்னுமும் புரியவில்லையே என்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. என்றும் தமிழ் உறவுகளை உயிராய் நேசிக்கும் உங்கள் செந்தூரன்”. இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்
இவருக்கு அஞ்சலி செலுத்தும்பொருட்டு வட மாகாண கல்வி அமைச்சின் உத்தரவின்படி பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிக்கூட சீருடையுடன் வந்த பல மாணவர்கள் செந்தூரனின் சவப்பெட்டியை சுமந்துச் சென்று தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்