இலங்கை இனமோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

இலங்கை இனமோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு
Last Modified சனி, 27 ஜூன் 2015 (11:30 IST)
இலங்கையில் உள்நாட்டுப் போரினாலும் இன வன்முறைகளினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை துரிதமாக வழங்க தற்போதைய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே இழப்பீடு வழங்கப்படாத நிலையில் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சின் நிர்வாகத்திலுள்ள புனர்வாழ்வு அதிகாரசபையில் ஆயிரக்கணக்கான விண்ணப்பக் கோப்பைகள் ஆண்டுக்கணக்கில் தேங்கிக் கிடப்பதாக கூறப்படுகின்றது.

புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சு எடுத்துள்ள புதிய தீர்மானத்தின்படி அந்தக் கோப்புகளை மீளாய்வு செய்யும் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்றுவருகின்றன.

இதன் காரணமாக எதிர்காலத்தில் இழப்பீடுகள் வழங்குதலை துரிதப்படுத்த முடியம் என அதிகாரிகள் நம்புகின்றார்கள்.

புனர்வாழ்வு அதிகார சபையின் அதிகாரிகள் பாதிக்கப்பட்டப் பிரதேசங்களுக்கு கோப்புக்களுடன் சென்று விண்ணப்பதாரிகளுடன் சந்திப்புக்களை நடத்தி படிவங்களை பூர்த்தி செய்து வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்தில் இரு நாட்களில் 1500 பேரின் கோப்புகளிலுள்ள ஆவணங்கள் மீளாய்வு செய்யப்பட்டு தேவையான ஆவணங்களும் புதிதாக இணைக்கப்பட்டுக் கோப்புக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே விண்ணப்பங்களை முன் வைத்துள்ள பலர் உரிய ஆவணங்களை இணைக்காததன் காரணமாகவே அவர்கள் தமது இழப்பீடுகளை பெறுவதில் 12 முதல் 15 ஆண்டுகள்வரை தாமதங்கள் ஏற்படுவதாக புனர்வாழ்வு அதிகார சபையின் நிறைவேற்று இயக்குநரான வி.புகேந்திரன் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :