சுன்னாகம் நிலத்தடிநீர் பிரச்சனை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு

சுன்னாகம் நிலத்தடிநீர் பிரச்சனை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு
Last Modified வெள்ளி, 5 ஜூன் 2015 (06:11 IST)
யாழ் சுன்னாகம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையம் காரணமாக அங்குள்ள நிலத்தடிநீர் மாசடைவதாகவும், அதை தடுக்கும் வகையிலான உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரியும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சூழல் பாதுகாப்பு அமைப்பு என்கிற அமைப்பால் தாக்கல் செய்தயப்பட்டுள்ள இந்த வழக்கின் மனுவில் பிரதிவாதிகளாக சூழல் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மின்சார சபை உட்பட அரச நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் இணைப்பாளர் ரவீந்திர காரியவசம் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மின்சார நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்கள் காரணமாக பிரதேசவாசிகளின் சுகாதாரத்திற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக இந்த மனுவில் தெரிவிக்ககப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதியில் வாழும் மக்கள் அருந்தும் குடிநீரில் அவர்களின் சுகாதாரத்தை பாதிக்கக்கூடிய இரசாயனப் பொருட்கள் காணப்படுவதாகக்கூறிய ரவீந்திர காரியவசம், இலங்கைக் குடிநீர் அதிகாரசபை மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த இரசாயன பொருட்களின் மூலம் மனித சுகாதாரத்திற்கு மட்டுமல்ல, விவசாய நடவடிக்கைகளுக்கும் பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சுன்னாகம் பகுதியின் நிலத்தடிநீரும், குடிநீரும் மாசடைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவொன்றை பிறப்பிக்கும்படி இந்த மனு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :