1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வியாழன், 25 செப்டம்பர் 2014 (13:32 IST)

நாளை வெளியாகும் முக்கிய தமிழ்ப் படங்கள் - ஒரு சிறப்புப் பார்வை

நாளை வெளியாகும் முக்கிய தமிழ்ப் படங்கள் - ஒரு சிறப்புப் பார்வை
 
நாளை நான்கு நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. இந்த நான்கில் எதிர்பார்ப்புக்குரிவை இரண்டு. அட்டகத்தி ரஞ்சித்தின் மெட்ராஸ் மற்றும் சுசீந்திரனின் ஜீவா.
 
மெட்ராஸ்
 
அலெக்ஸ் பாண்டியன், அழகுராஜா போன்ற அட்டர் ப்ளாப் படங்களால் பெரும் சறுக்கலுக்குள்ளான கார்த்தி, சற்று நிதானத்துடன் நடித்துள்ள படம் மெட்ராஸ். வடசென்னையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் காளி என்ற மாடர்ன் இளைஞனாக கார்த்தி வருகிறார். வடசென்னைக்கே உரிய இசையும், கொண்டாட்டங்களும் விளையாட்டு விருப்பங்களும் படத்தில் நிறைந்துள்ளது. 

 
கார்த்தியின் ஜோ‌டியாக நடித்திருப்பவர் கேத்ரின் தெரேஸா. தெலுங்கில் நடித்து வரும் இவருக்கு இது முதல் தமிழ்ப் படம்.
 
படத்தை அட்டகத்தியை இயக்கிய ரஞ்சித் இயக்கியுள்ளார். அட்டகத்தியில் பழைய வடசென்னையைக் கண்முன் கொண்டு வந்தவர் இதிலும் அதே மேஜிக்கைத் தொடர்ந்திருப்பதாகப் பட யூனிட் கூறுகிறது. 
 
ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா படத்தைத் தயாரித்துள்ளார். கார்த்தியின் படங்களை இவர்தான் தொடர்ந்து தயாரித்து வருகிறார். முந்தைய படங்கள் பலமாக அடிவாங்க, மெட்ராஸ் படத்தின் திரைக்கதை பலமுறை மாற்றி அமைக்கப்பட்டதாகச் செய்திகள் உண்டு. 
 
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ரசிகர்களை ஏற்கனவே கவர்ந்துள்ளன. கபிலன், கானா பாலா, உமா தேவி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு முரளி. 
 
இந்தப் படத்துக்கு முதலில் காளி என்றுதான் பெயர் வைத்தனர். அந்தப் பெயரில் இதற்கு முன் தயாரான படங்கள் விபத்துகளைச் சந்தித்தததால் தமிழ் சினிமா சென்டிமெண்ட்படி பெயர் மாற்றப்பட்டது. 
 
சென்சார் யுஏ சான்றிதழ் வழங்கியுள்ள இப்படம், கார்த்தியின் அடுத்த வருட ஸ்டார் வேல்யூவையும், மார்க்கெட்டையும் நிர்ணயிக்கும் படமாக இருக்கும்.
 
அடுத்து

ஜீவா
 
பாண்டிய நாடு வெற்றிக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கியிருக்கும் படம் ஜீவா. மற்றவர்களின் கதையை தெரிந்தும் தெரியாமலும் படமாக்குகிறார் என்ற குற்றச்சாட்டு சுசீந்திரன் மீது உண்டு. என்றாலும் ஒவ்வொரு படத்தையும் வேறு வேறு ஜானர்களில் எடுப்பதற்காக அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். ஜீவா, கிரிக்கெட்டை மையப்படுத்தியது. 

 
வெண்ணிலா கபடிக் குழுவில் சுசீந்திரன் அறிமுகப்படுத்திய விஷ்ணுதான் படத்தின் ஹீரோ. செலிபிரிட்டி கிரிக்கெட் லீகில் தமிழ் நடிகர்களின் சென்னை அணி சார்பில் மைதானத்தில் கலக்கும் விஷ்ணு, கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படத்தில் நாயகனாகியிருப்பது பொருத்தமானது. ஸ்ரீதிவ்யா, ஹீரோயின். சுரபியும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
 
இந்தப் படத்தை த நெக்ஸ்ட் பிக் ஃபிலிம்தான் தொடங்கியது. கடைசியில் ஆர்யாவின் த ஷோ பீப்பிளும் இணைந்துகொண்டது. நமக்குக் கிடைத்த தகவலின்படி முதல் காப்பி அடிப்படையில் இந்த இரு நிறுவனங்களுக்காக சுசீந்திரனே தனது வெண்ணிலா கபடி டீம் புரொடக்ஷன் சார்பாகப் படத்தை தயாரித்து தந்துள்ளார்.
 
டி.இமான் இசையமைக்க வைரமுத்துவும் அவரது இரு மகன்கள் கபிலன், மதன் கார்க்கியும் பாடல்களை எழுதியுள்ளனர். இந்திப் படம், சக் தே இந்தியா போன்று விளையாட்டைப் பற்றிய முழுமையான படம் ஜீவா என ஆர்யா படம் குறித்துப் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தப் படத்துக்கு முதலில் வீர தீர சூரன் என்ற பெயரைதான் சுசீந்திரன் வைப்பதாக இருந்தது. பிறகு திடீரென ஜீவா என பெயர் மாற்றப்பட்டது.
 
சென்சார் யு சான்றிதழ் தந்துள்ள இப்படம், நாளை வெளியாகிறது.
 
அடுத்து

பிற படங்கள்
 
நாளை வெளியாவதில் இவ்விரு படங்கள்தான் எதிர்பார்ப்புக்குரியவை. அதிலும் மெட்ராஸைதான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். காரணம் கார்த்தி மற்றும் ரஞ்சித். 

 
இவ்விரு படங்கள் தவிர, தலக்கோணம், அம்பேல் ஜுட் என்ற இரு படங்களும் வெளியாகின்றன. ஸ்டார் வேல்யூ இல்லாத இப்படங்கள் ஒரு வாரம் தாக்குப் பிடித்தாலே அதன் தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை வெற்றிதான்.