1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : செவ்வாய், 29 மார்ச் 2016 (08:40 IST)

தேசிய விருது - அமிதாப்பிடம் கமல், மம்முட்டி கற்க வேண்டியவை

63 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


 

 
பிக்கு படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய அமிதாப் பச்சன் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அவருக்கு கிடைக்கும், சிறந்த நடிகருக்கான நான்காவது தேசிய விருதாகும்.
 
1969 -இல் நடிக்க வந்த அமிதாப் பச்சன் அதிகமும் வெகுஜனங்களை கவரும் படங்களிலேயே நடித்தார். அவர் ஏற்றுக் கொண்ட வேடங்கள் இந்திய சினிமாவின் நாயக பிம்பத்தை ஒத்ததாகவே பெரும்பாலும் அமைந்தன. அவை அமிதாப் பச்சனை இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது.
 
எண்பதுகளின் இறுதியில் அமிதாப்பின் ஸ்டார் இமேஜ் சரியத் தொடங்கியது. 1992 -இல் அமிதாப், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான குதாகவா படத்தின் தோல்வி அவரது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை மறுபரிசீலனை செய்ய வைத்தது. அத்துடன் அவரது ஏபிசில் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து இரு வீடுகளை விற்கும் நிலைக்கு அமிதாப் தள்ளப்பட்டார்.
 
அமிதாப்பின் இரண்டாவது இன்னிங்ஸ் 2000 -இல் மொகபதீன் படத்தில் தொடங்கியது. தனது வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். விரைவில் அமிதாப்பின் வயதுக்கேற்ற கதைகளை இந்தி சினிமா உருவாக்க ஆரம்பித்தது. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் கோபக்கார இளைஞனாக மட்டும் திரையில் உலவிய அமிதாப்பின் பல்முகங்கள் இரண்டாயிரத்துக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்தன.
 
1969 -இல் நடிக்க வந்த அமிதாப்பிற்கு முதல் தேசிய விருது 1990 -இல் அக்னிபாத் திரைப்படத்துக்காக கிடைத்தது. அதன் பிறகு 2005 -இல் பிளாக் திரைப்படத்துக்காக இரண்டாவதுமுறை சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். 2009 -இல் பா படத்துக்காக மூன்றாவதுமுறை. இப்போது 2015 -இல் பிக்கு படத்திற்காக தேசிய அளவில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


 

 
அமிதாப் பச்சன் இரண்டாவது தேசிய விருதை பெறுவதற்கெல்லாம் பல வருடங்கள் முன்பே கமலும், மம்முட்டியும் மூன்று தேசிய விருதுகளை பெற்றிருந்தனர். 1983 -இல் மூன்றாம் பிறைக்காக முதல் தேசிய விருதை பெற்ற கமல் 1988 -இல் நாயகனுக்காக இரண்டாவது முறையும், 1997 -இல் இந்தியனுக்காக மூன்றாவது முறையும் தேசிய விருதுகளை வென்றார். 
 
மம்முட்டி 1989 -இல் மதிலுகள், ஒரு வடக்கன் வீரகதா படங்களுக்காக முதல் தேசிய விருதை பெற்றார். 1993 -இல் பொந்தன் மாட, விதேயன் படங்களுக்காக இரண்டாவது தேசிய விருது. 1999 -இல் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் திரைப்படத்துக்காக மூன்றாவது தேசிய விருது. 
 
அமிதாப் பச்சனைவிட இரண்டு விருதுகள் அதிகம் பெற்றிருந்த கமலையும், மம்முட்டியையும் அமிதாப் இன்று பின்னுக்கு தள்ளியிருக்கிறார். இது எப்படி நடந்தது?
 
கமலின் 50 ஆண்டு திரைவாழ்க்கையை பாராட்டி நடந்த விழாவில் பேசிய மம்முட்டி, கமலும், தானும் 3 தேசிய விருதுகளை வாங்கியிருப்பதாகவும், நான்காவதை யார் முதலில் வாங்கப் போவது என்று இருவருக்குள்ளும் ஒரு போட்டி இருப்பதாகவும் குறிப்பிட்டார். அப்போது, அமிதாப் தங்களுக்கு போட்டியாக வருவார் என அவர் நினைத்திருக்க மாட்டார்.


 

 
கமலும், மம்முட்டியும் எண்பதுகளிலும், தொண்ணுnறுகளிலும் முயற்சி செய்த வித்தியாசமான அழுத்தமான கதைகளை, கதாபாத்திரங்களை இப்போது முயற்சி செய்வதேயில்லை. 2004 -இல் வெளிவந்த காழ்ச்ச படத்துக்குப் பிறகு மம்முட்டியிடமிருந்து காத்திரமான ஒரு படைப்பு வரவில்லை.
 
கமலும் தசாவதாரம், விஸ்வரூபம் என்று ஃபிலிம் காட்டுவதற்கே அதிகம் மெனக்கெடுகிறார். மகாநதி, ஹேராம் போன்ற முயற்சிகளை இனி கமலிடம் எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வியை அவரது உத்தம வில்லன், தூங்கா வனம் போன்ற படங்கள் எழுப்புகின்றன. 
 
கமல் கடைசியாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கி 18 வருடங்களாகிறது. மம்முட்டி 16 வருடங்கள். ஆனால், அமிதாப் கடைசி பத்து வருடங்களில் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
 
கமலும், மம்முட்டியும் அமிதாப்பின் தடத்தில் பயணிக்க வேண்டிய தருணம் இது.