1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2016 (14:55 IST)

அதிர்ஷ்டத்தை இழந்த செப்டம்பர் சினிமாக்கள்

செப்டம்பர் மாத ஆரம்பத்தில் வெளியாகவிருக்கும் படங்கள் தங்களின் அதிர்ஷ்டத்தை இழந்துள்ளன. தமிழ்ப் படங்களின் வசூல் தொடர்ந்து கவலைக்குரியதாக இருக்கும் நேரத்தில் இந்த செய்தி தமிழ் சினிமாதுறையை மேலும் அச்சப்படுத்துவதாக உள்ளது.


 
 
நேரடியாகவே விஷயத்துக்கு வருவோம். செப்டம்பர் 2 -ஆம் தேதி வெளியாகவிருக்கும் கிடாரி, குற்றமே தண்டனை மற்றும் செப்டம்பர் 9 -ஆம் தேதி வெளியாகவிருக்கும் இருமுகன் ஆகிய படங்கள் அரசின் 30 சதவீத வரிச்சலுகையை இழந்துள்ளன. அதாவது வசூலில் முப்பது சதவீதத்தை இந்தப் படங்கள் அரசுக்கு கட்டியாக வேண்டும்.
 
கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில், தமிழில் பெயர் வைக்கும் அனைத்துப் படங்களுக்கும் 30 சதவீத கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதனால் கருணாநிதியின் பேரன்கள்தான் அதிகம் பயனடைந்தார்கள் என்று சிலர் குற்றஞ்சாட்டினாலும், அழகழகான தமிழ் பெயர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தன.
 
ஜெயலலிதா தலைமையிலான அரசு பதவியேற்றதும் திமுக கொண்டுவந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்தனர். தமிழில் பெயர் இருந்தால் மட்டும் போதாது யு சான்றிதழ் வாங்கியிருக்க வேண்டும். தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டும்... இப்படி சில.
 
இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்த பிறகு யு சான்றிதழுக்கு மவுசு அதிகரித்தது. தனது படத்துக்கு யு சான்றிதழ் கிடைக்குமா என்று தேர்வு எழுதிய மாணவன் போல் தயாரிப்பாளர்கள் பதட்டப்பட ஆரம்பித்தனர். இந்த முப்பது சதவீத வரிச்சலுகையின் பலனை திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், இவர்கள் வழியாக நடிகர்கள் பங்குப் போட்டுக் கொள்வதால், வரிச்சலுகை பெறாத படங்களை திரையிட திரையரங்குகளும் ஆர்வம் காட்டுவதில்லை. சரி, யு சான்றிதழ் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? அதை பேசினால் இந்த கட்டுரை அனுமார் வால் போல நீளும், அதனால் வேண்டாம்.
 
செப்டம்பர் 2 வெளியாகும் கிடாரி, குற்றமே தண்டனை படங்களுக்கு யுஏ சான்றிதழே கிடைத்தது. அதனால் இவ்விரு படங்களும் வரிச்சலுகையை இழக்கின்றன. நிச்சயமாக இவ்விரு படங்களிலும் யு சான்றிதழ் பெற்ற பல படங்களில் இருக்கிற வன்முறையும், ஆபாசமும் குறைவாகவே இருக்கும். அதே போல் இருமுகன் படம். கபாலியில் ஆளாளுக்கு சுட்டுக் கொல்கிறார்கள், கையை வெட்டி தனியாக பார்சல் அனுப்புகிறார்கள். அதற்கே யு சான்றிதழ் தந்தவர்கள் குற்றமே தண்டனைக்கு எதன் அடிப்படையில் யுஏ சான்றிதழ் தந்திருக்கிறார்கள் என்பதை படம் வந்த பிறகுதான் பார்க்க வேண்டும். 
 
சான்றிதழ் தருகிற முறை கண்டிப்பாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதையே இந்த மூன்று படங்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் வரிச்சலுகை காட்டுகிறது. இந்த விஷயத்திலாவது திரையுலகம் ஒன்றிணைந்து போராடுமா என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும்.