1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2017 (09:41 IST)

கடந்தவார படங்களின் வசூல் ஒரு பார்வை

கடந்தவார சென்னை பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்தது போல், சி 3 படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. போகனின் வசூல்  பெருமளவு குறைந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

 
ஆங்கிலப் படமான ரெசிடென்ட் ஈவில் - தி பைனல் சேப்டர் திரைப்படம் சென்றவார இறுதியில் கால் லட்சத்தை மட்டுமே  வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் வசூல், 38.40 லட்சங்கள்.
 
ஜெய்யின் எனக்கு வாய்த்த அடிமைகள் கடந்த வார இறுதியில், ஒரு லட்சத்தை வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன்  சென்னை வசூல், 47.40 லட்சங்கள். தெலுங்குப் படமான நீனு லோக்கல் கடந்தவார இறுதியில் சென்னையில் 2.90 லட்சங்களை தனதாக்கியுள்ளது. நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த இப்படம் கடந்த ஞாயிறுவரை சென்னையில் 28.60 லட்சங்களை  வசப்படுத்தியுள்ளது.
 
ஆங்கிலப் படமான ரிங்ஸ் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல், 7.03 லட்சங்கள். தெலுங்குப்  படமான ஓம் நமோ வெங்கடேசா திரைப்படமும் சென்ற வாரம் வெளியானது. நாகார்ஜுன், அனுஷ்கா நடித்த இந்தப் படம் முதல்  மூன்று தினங்களில் 13.06 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 
சென்ற வாரம் வெளியான இந்திப் படம், ஜாலி எல்எல்பி 2. அக்ஷய் குமார் நடித்த இப்படம் முதல் மூன்று தினங்களில்  சென்னையில் 23.33 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 
போகன் எதிர்பார்த்ததைவிட அதிக ஓபனிங்கை பெற்றது. ஆனால், இரண்டாவது வார இறுதியிலேயே பெரும் சரிவை  சந்தித்துள்ளது. முதல்வார இறுதியில் ஒரு கோடியை தாண்டிய இதன் வசூல், இரண்டாவது வாரமான சென்ற வார இறுதியில்  42.80 லட்சங்களை மட்டுமே தனதாக்கியுள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல், 2.81 கோடிகள்.
 
முதலிடத்தில் சி 3. வியாழக்கிழமை வெளியான இந்தப் படம், வெள்ளி, சனி, ஞாயிறில் 1.55 கோடியை வசூலித்துள்ளது.  வியாழனையும் சேர்த்தால் 2.16 கோடிகள். நல்ல வசூல், என்றாலும் பைரவா அளவுக்கு வசூலிக்கவில்லை. பைரவா முதல்  நான்கு தினங்களில் 3.09 கோடிகளை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.