1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2016 (12:20 IST)

கடந்தவார படங்களின் கலெக்ஷன் ஒரு பார்வை

கடந்தவார படங்களின் கலெக்ஷன் ஒரு பார்வை

கடந்தவாரம் வெளியான படங்கள் எதுவும் பாக்ஸ் ஆபிஸில் சோபிக்கவில்லை. அதற்கு முந்தைய வாரம் வெளியான றெக்க, தேவி, ரெமோ படங்களே சென்னை பாக்ஸ் ஆபிஸில் இப்போதும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

 
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணின் இயக்குனராக மூன்றாவது திரைப்படம், அம்மணி. முதலிரண்டு படங்களைவிட இந்தப் படம் பத்திரிகைகளால் பாராட்டப்பட்டது. ஆனால், ரசிகர்களை கவரும் நடிகர், நடிகைகள் படத்தில் இல்லாததால் படம் மிகச்சுமாராகவே வசூலித்துள்ளது. சென்ற வாரம் வெளியான இந்தப் படம், முதல் மூன்று தினங்களில் 1.08 லட்சங்களை மட்டுமே வசூலித்து நஷ்டத்தை உறுதி செய்துள்ளது.
 
இந்திப் படமான எம்.எஸ்.டோனி - த அன்டோல்ட் ஸ்டோரி சென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 5 -இல் இந்த வாரமும் இடம்பிடித்து அசத்தியுள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 6.09 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல், 2.16 கோடிகள். இது பல தமிழ்ப் படங்களின் வசூலைவிட அதிகம்.
 
ஹாலிவுட் படமான இன்ஃபெர்னோ தமிழகத்தில் அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. டாவிடின்சி கோட், ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ் படங்களின் தொடர்ச்சி என்பதாலும், டாம் ஹங்ஸ் நடித்திருப்பதாலும் படத்துக்குழு நல்ல ஓபனிங். சென்ற வாரம் வெளியான இந்தப் படம், முதல் மூன்று தினங்களில் 23.75 லட்சங்களை சென்னையில் வசூலித்துள்ளது.
 
65.72 லட்சங்களை முதல்வாரத்தில் வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்த விஜய் சேதுபதியின் றெக்க, இரண்டாவது வார இறுதியில் கணிசமான வசூலை இழந்துள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 28.40 லட்சங்களை மட்டுமே வசூலித்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல், 1.44 கோடி.
 
அதேநேரம், 37.48 லட்சங்களை வசூலித்து முதலாவது வாரத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்த தேவி திரைப்படம் சென்ற வார இறுதியில் 43.01 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஒரு படம் ஓபனிங் வீக்எண்டைவிட அதிக வசூலை அடுத்த வீக் எண்டில் பெறுவது அசாத்தியம். தேவி அதனை சாதித்துள்ளது. அதன் ஒட்டுமொத்த சென்னை வசூல் ஞாயிறுவரை, 1.24 கோடி.
 
அதே முதலிடத்தில் ரெமோ உள்ளது. முதல்வார இறுதியில் 1.71 கோடியை வசூலித்த படம், வார நாள்களில் 1.83 கோடியையும், வார இறுதியில் 1.27 கோடியும் வசூலித்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஞாயிறுவரை முதல் 11 தினங்களில் ரெமோவின் வசூல் 4.84 கோடிகள். இது இருமுகன், 24 படங்களின் ஓபனிங் வசூலைவிட அதிகம்.