1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (19:35 IST)

கலாபவன் மணியின் மரணத்துக்கு நண்பர்கள் காரணமா...?

நடிகர் கலாபவன் மணியின் மரணம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.


 

 
கடந்த ஆறாம் தேதி கலாபவன் மணி தனது வீட்டிற்கு அருகிலுள்ள, ஆற்றையொட்டிய குடிலில் ரத்த வாந்தி எடுத்தார். அதனைத் தொடர்ந்து கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். கலாபவன் மணியின் கல்லீரல் மோசமான முறையில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், ரத்தத்தில் மெத்தனால் கலந்திருந்ததாகவும் மருத்துவர்கள் கூறினர்.
 
அளவுக்கதிகமான மதுவே மணியின் மரணத்துக்கு காரணம் என சொல்லப்பட்ட நிலையில், கொச்சி காக்கநாடு ரசாயன ஆயவுக்கூடத்திலிருந்து வந்திருக்கும் முடிவுகள், மணி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன.
 
மணியின் உடல் உள்ளுறுப்பு சாம்பிள்கள் ரசாயன ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன.
 
கலாபவன் மணியின் குடல்பகுதி மாதிரிகளில் கொடிய பூச்சிக் கொல்லி மருந்தான குளோர்பைரிபோஸ் இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது ஆளைக் கொல்லும் விஷமாகும்.
 
மேலும், மணியின் ரத்தத்தில் மெத்தனாலின் அளவு அதிகமாக இருந்துள்ளது. அரசு விற்பனை செய்யும் மதுவுல் இந்தளவு மெத்தனால் இருக்க வாய்ப்பில்லை. இந்த ஆய்வு முடிவுகள், மணி அருந்திய மதுவில் பூச்சிக்கொல்லி விஷயம் கலந்து தரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எற்படுத்தியுள்ளது.
 
மணி இறப்பதற்கு முன்தினம் நடிகர்கள் ஜாபர் இடுக்கி, சாபு ஆகியோர் மணியை சென்று சந்தித்துள்ளனர். அப்போது மணியுடன் ஒரேயொரு பீர் அருந்தியதாக ஜாபர் இடுக்கு கூறியுள்ளார். நடிகர் சாபு, மது அருந்துவதற்கு முன் அங்கிருந்து கிளம்பிவிட்டேன் என கூறியுள்ளார். இவர்களையும் போலீஸ் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரித்து வருகிறது.
 
மணி மருத்துவமனையில் மரணமடைந்ததும், அவர் மது அருந்திய இடத்தை மணியின் உதவியாளர்கள் அருண், விபின், முருகன் ஆகியோர் அவசர அவசரமாக சுத்தப்படுத்தி தடயங்களை அழித்துள்ளனர். மது பாட்டில்களையும் மறைத்துள்ளனர். அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
நடிகர் சாபுக்கும், மணிக்கும் சின்னதாக உரசல் இருந்து வந்துள்ளது. அதனால், மணியின் மரணத்தில் சாபுக்கு தொடர்பு இருக்கலாம் என சமூகவலைத்தளத்தில் யூகச் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
 
மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன், எனது அண்ணனுடன் மது அருந்திய யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. என்வே அவருடன் மது அருந்திய அனைவர் மீதும் எனக்கு சந்தேகம் உள்ளது என முக்கியமான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
 
கலாபவன் மணி தனது நண்பர்கள் பெயரில் நிறைய சொத்துகள் வாங்கியுள்ளார். அதில் விலையுயர்ந்த ரிசார்ட்டும் அடக்கம் என்கிறார்கள். இரண்டு டஜனை தொடும் மணியின் நண்பர்களில் யாரேனும், சொத்துக்காக இதனை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் வலுப்பெற்றுள்ளது.
 
கலாபவன் மணியின் மரணம் மதுவால் அல்ல விஷத்தால் நடந்தது என்ற பரிசோதனை முடிவு கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.