1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 12 ஜூலை 2016 (10:10 IST)

வரலாற்றில் முதல்முறையாக.... சென்னையில் ஹாலிவுட் சினிமாக்கள் சாதனை

வரலாற்றில் முதல்முறையாக.... சென்னையில் ஹாலிவுட் சினிமாக்கள் சாதனை

தமிழகத்தில் - குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் ஹாலிவுட், இந்தி திரைப்படங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.


 


ஹாலிவுட் படங்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடிக்கும் நிகழ்வுகள் கடந்த வருடம் அரங்கேறியது. இந்த வருடமும் சில ஹாலிவுட் படங்கள் தமிழ்ப் படங்களுக்கு இணையாக வசூலித்தன.
 
ஜேம்ஸ் வான் இயக்கிய த கான்சூரிங் திரைப்படம் இந்தியாவில் அதிகம் பேரால் விரும்பிப் பார்க்கப்பட்டது. அதன் இரண்டாம் பாகமான த கான்சூரிங் 2 மூன்று வாரங்கள் முன்பு திரைக்கு வந்தது. முதல் மூன்று தினங்களில் அப்படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் 98.27 லட்சங்களை வசூல் செய்தது. விஷாலின் மருது, சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், எழிலின் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்பட பல படங்களின் ஓபனிங் வசூலைவிட இது அதிகம். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், இறைவி, ஒரு நாள் கூத்து படங்களையெல்லாம் இப்படம் பின்னுக்கு தள்ளியது.
 
இரண்டாவது வார இறுதியிலும் இந்தப் படமே சென்னை பாக்ஸ் ஆபிஸில், 73.50 லட்சங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, முத்தின கத்திரிக்காய் என இரு படங்கள் அந்த வாரம் வெளியாயின. த கான்சூரிங் 2 படம், 73.50 லட்சங்களை வசூலிக்க, எனக்கு இன்னொரு பேர் இருக்கு 59.60 லட்சங்களையும், முத்தின கத்திரிக்காய் 28.50 லட்சங்களையும் மட்டுமே வசூலித்து முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடித்தன.
 
சென்ற வார இறுதியிலும் ஹாலிவுட் படமே சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 
 
இன்டிபென்டன்ஸ் டே படத்தின் இரண்டாம் பாகமான இன்டிபென்டன்ஸ் டே - இன்சர்ஜென்ஸ் சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. முதல் மூன்று தினங்களில் இப்படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் 82 லட்சங்களை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்றவாரம் வெளியான அம்மா கணக்கு, மெட்ரோ படங்களை இப்படம் பின்னுக்கு தள்ளியுள்ளது.
 
ஃப்யூரியஸ் 7, ஜுராஸிக் பார்க் - லாஸ்ட் வேர்ல்ட், த ஜங்கிள் புக் என்று தொடர்ச்சியாக ஹாலிவுட் படங்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்துகின்றன. தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் ஹாலிவுட் படங்கள் நேரடி தமிழ்ப் படங்களை பின்னுக்கு தள்ளி சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளன.
 
த கான்சூரிங் 2 சென்னையில் கடந்த ஞாயிறுவரை 3.33 கோடிகளை வசூலித்துள்ளது. தூங்காவனத்தை நெருங்கும் வசூல் இது. மாரியைவிட அதிகம். இந்த வருடத்தின் லாப கணக்கில் வரும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படம் சென்னையில் இதுவரை 1.89 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இது நம்ம ஆளு படத்தின் சென்னை வசூலும் த கான்சூரிங் 2 படத்தைவிட குறைவு. 
 
ஹாலிவுட்டுக்கும் தமிழகத்துக்குமான எல்லை சுருங்கி வருவதையே இது காட்டுகிறது. வரும் நாட்களில் இந்த ஆதிக்கம் இன்னும் அதிகரிக்கும். இதனை ஹாலிவுட் சினிமாவின் ஆதிக்கமாக கருதாமல், தமிழ் சினிமாவின் போதாமையாக கருதி செயல்பட்டால் மட்டுமே இதிலிருந்து மீள முடியும்.