வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2017 (17:12 IST)

சினி பாப்கார்ன் - சர்வம் ஜல்லிக்கட்டு மயம்

தமிழகத்தின் திரையரங்குகளை நிரம்பும் மாணவர்களும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டுக்காக மெரினாவிலும், தமுக்கத்திலும் இன்னும் நூற்றுக்கணக்கான இடங்களிலும் போராட்டத்தில் குவிந்ததால் திரையரங்குகளில் படங்களை பார்க்க ஆளில்லை. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொண்ட திரையரங்கு உரிமையாளர்கள் இரண்டு  காட்சிகளை இன்று ரத்து செய்திருக்கிறார்கள்.

 
எந்தப் போராட்டமாக இருந்தாலும் அதை திரைநட்சத்திரங்கள் நடத்தும்போதுதான் மீடியாவும், சமூகமும் பரபரப்படையும்.  தங்கள் அபிமான நடிகர்கள் வருகையில் மாணவர்களும், இளைஞர்களும் முண்டியடிக்க, திரைத்துறையினர் சற்றே எரிச்சலுடன் அவர்களை அடக்குவார்கள். ஏம்பா சத்தம் போடாத என்றும் தள்ளி நில்லு என்றும் எச்சரிப்பார்கள். இந்தமுறை நிலைமை  அப்படியே தலைகீழ். இதுவரை வேடிக்கைப் பார்த்தவர்கள் திரைநட்சத்திரங்களை தள்ளிப்போ என்கிறார்கள். நீ வரவே  தேவையில்லை என்கிறார்கள்.
 
திரைத்துறையினர் அதிலும் நடிகர்கள் போராட்டம் நடத்தினால் மீடியா அங்கு குவியும். இந்தமுறை போராட்டக்காரர்களின்  எதிர்ப்பால், நடிகர் சங்க நிர்வாகிகளே, மீடியா எங்கள் மவுனப்போராட்டத்தை கவர் பண்ண வேண்டாம் என்று அறிக்கை  வெளியிட்டது. தவிர இன்று மவுனப்போராட்டம் நடத்த இடத்தில் மீடியா எதுவும் அனுமதிக்கப்படவில்லை.
 
பொதுவாக நடிகர்களை கண்டால் அவர்களை சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்கும் இளைஞர்கள் இந்தமுறை  நீங்கள்போராட்டத்துக்கே வரவேண்டாம் என்று துரத்துகிறார்கள். அதேநேரம் மன்சூரலிகான் போன்றவர்களை அவர்கள் எதுவும்  செய்யவில்லை. தொடர்ந்து மக்கள் பிரச்சனையில் குரல் கொடுப்பவர்களை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப குரல் கொடுப்பவர்கள் யார் என்பது அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது.
 
இந்தப் போராட்டத்தால் பல படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று அஜய் ஞானமுத்துவின்  இமைக்கா நொடிகள். அதில் நடித்துவந்த இயக்குனர் அனுராக் காஷ்யபுக்கு ஆச்சரியம். இப்படியொரு மாஸிவ் போராட்டமா?  இதுபோல் கண்டதேயில்லை. இது ஏன், இதுபற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார்.
 
ஆந்திராவின் பிரின்ஸ் மகேஷ்பாபுவும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்துக்கு தனது ஆதரவை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அனைவருக்கும் ஆச்சரியம், எப்படி லட்சக்கணக்கான பேர் திரண்டும் சிறு அத்துமீறல்கூட இல்லை என்பதுதான்.
 
இதுவரை தமிழக இளைஞர் சமூகம் திரைநட்சத்திரங்களின் பின்னால் சென்றது. முதல்முறையாக இளைஞர் சமூகத்தின் பின்னால் திரைநட்சத்திரங்கள் பவ்யமாக அணிவகுத்திருக்கிறார்கள்.
 
நம்பவே முடியாத அதிசயம்.