திங்கள், 18 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: சனி, 30 ஜூலை 2016 (11:01 IST)

தெலுங்கு சினிமாவில் நடிக்க நயன்தாராவுக்கு மீண்டும் தடை

தெலுங்கு சினிமாவில் நடிக்க நயன்தாராவுக்கு மீண்டும் தடை

தெலுங்கு சினிமாவில் நயன்தாராவை நடிக்க வைக்கக் கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில், நயன்தாராவுக்கு ரெட் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.


 

 
ஏன் இந்த தடை? அறிவதற்கு முன் ஒரு சின்ன பிளாஷ்பேக்.
 
2014 -இல் நயன்தாரா தெலுங்கில் சேகர் கம்மூலாவின் அனாமிகா என்ற படத்தில் நடித்தார். இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற கஹானி படத்தின் தழுவல். தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் அனாமிகாவை வெளியிட்டனர்.
 
நயன்தாரா நடித்த முதல் நாயகி மையப்படம் அனாமிகா. அதில் ஹீரோ,  ஹீரோயின் எல்லாம் அவரே. அப்படியிருந்தும் அனாமிகாவின் எந்த விளம்பர நிகழ்ச்சிகளிலும் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. அவர் கலந்து கொண்டிருந்தால் படத்துக்கு ஒரு விளம்பர வெளிச்சம் கிடைத்திருக்கும். படம் வெற்றி பெற்றிருந்தால் வினையே இல்லை. ஆனால் தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் படம் தோல்வி. அதனைத் தொடர்ந்து நயன்தாரா மீது படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தார். ஒரு வருடம் தெலுங்குப் படத்தில் நயன்தாரா நடிக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.
 
போங்கடா நீங்களும் உங்க தடையும் என்று தமிழ், மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் நயன்தாரா. அவர் செல்லுமிடமெல்லாம் கோடிகள்தர தயாராக இருக்கிறார்களே. தமிழ், மலையாளத்தில் சரசரவென பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அதில் ஏழு தமிழ்ப் படங்களும் இரண்டு மலையாளப் படங்களும் வெளியாகியுள்ளன. மூன்று தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளன. இரண்டு அண்டர் புரொடக்ஷனில்.
 
2014 -இல் அனாமிகாவுக்காக நயன்தாராவுக்கு தடை விதிக்கப்பட்டது. தடை நீங்கிய பிறகும் தெலுங்குப் படங்களில் நடிக்க அழைப்பு வந்தும் அவர் போகவில்லை. கடைசியில் வெங்கடேஷுக்காக பாபு பங்காரம் என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். மாருதி இயக்கம். இந்தப் படத்தின் இறுதிகட்டத்தில் நயன்தாராவுக்கும், வெங்கடேஷுக்கும் முட்டிக் கொண்டது என்கிறார்கள். இயக்குனருடனும் மனஸ்தாபம். கடைசி ஒரு பாடல் காட்சியில் நயன்தாரா நடிக்கவில்லை. நான் தந்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டீர்கள் இனி தரமுடியாது என்று நியாயமான பதிலை அவர் தர, அந்த பாடல் இல்லாமலே ஆகஸ்ட் 12 பாபு பங்காரத்தை வெளியிட முடிவு செய்தனர். அதேநாள் தமிழில் படத்தை டப் செய்து வெளியிடுவதாகவும் திட்டம். 
 
ரிலீஸ் தேதி நெருங்கியதால் நயன்தாராவை பாடல்கள் வெளியீடு, ட்ரெய்லர் வெளியீடு நிகழ்ச்சிகளுக்கு அழைக்க, எந்த விழாவிலும் கலந்து கொள்ள மாட்டேன், அது என் பாலிசி என்று அனாமிகா படத்தின் போது முறுக்கிக் கொண்டது போல் முறுக்கிக் கொண்டார். தமிழிலும் அவர் நடிக்கும் எந்தப் படத்தின் நிகழ்ச்சிக்கும் நயன்தாரா வருவதில்லை என்பது முக்கியமானது. தமிழ் சினிமாக்காரர்கள் அதனை கண்டு கொள்வதில்லை. ஆந்திராக்காரர்கள் அப்படியில்லை. உப்பு காரம் அதிகம் சேர்ப்பவர்கள். பாபு பங்காரத்தின் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ய, தெலுங்கில் நடிக்க நயன்தாராவுக்கு வாழ்நாள் தடை விதிக்க யோசித்து வருகிறார்கள். 
 
இன்னும் சில தினங்களில் இந்தத் தடை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.