கார்த்திகை மாத அஷ்டமி சிறப்பு வாய்ந்தது ஏன்....?
தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர்பிறை அஷ்டமி ஆகியவை பைரவ மூர்த்திக்கான நன்னாள். பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். எம பயம் இருக்காது. திருமணத் தடை அகலும்.
பைரவர் சனிபகவானுக்கே ஆசானாக, குருநாதராகப் போற்றப்படுகிறார் என்கிறது புராணம். அதனால், சனி பகவானின் இன்னல்களில் இருந்து நாம் விடுபட வேண்டுமெனில், பைரவரை வணங்கி தப்பித்துக் கொள்ளலாம்.
எவரொருவர் தேய்பிறை அஷ்டமி தோறும் பைரவ பகவானை வழிபடுகிறார்களோ... அவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்.
மாதந்தோறும் அஷ்டமி வரும். பைரவருக்கு விசேஷம் தான். ஆனாலும் கார்த்திகை மாத அஷ்டமி சிறப்பு வாய்ந்தது. இதை மகாதேவாஷ்டமி என்பார்கள். பைரவாஷ்டமி, வைக்கத்து அஷ்டமி என்றெல்லாம் போற்றுகிறார்கள்.
காலையிலும் மாலையிலும் சிறப்பு வழிபாடுகள் பைரவருக்கு நடைபெறும். சில ஆலயங்களில், காலை 7 மணிக்கெல்லாம் பூஜைகள் நடைபெறும். திருச்சி திருப்பட்டூர் பிரம்மா கோயிலில் உள்ள பைரவருக்கு காலை 10.30 முதல் 12.00 மணிக்குள் ராகுகால வேளையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
மாலையில் அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு வடைமாலை சார்த்தி வணங்குவார்கள் பக்தர்கள். மிளகு வடை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். செந்நிற மலர்கள், அரளி மாலை கொண்டு பைரவருக்கு அணிவித்து பிரார்த்தனை செய்யுங்கள். வெண் பொங்கல் நைவேத்தியம் வழங்கி, பைரவ வழிபாடு செய்தால், கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்ப்புகள் அகலும். தீய சக்திகள் அண்டாது.