1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஜெப மணிகளை கொண்டு தியானம் செய்யும்போது பின்பற்றவேண்டியவைகள் என்ன...?

தியானம் செய்யும் போது மந்திரங்களை துளசி மாலை கையில் வைத்து ஜெபம் செய்தால் ஞானம் பெறலாம்.


உடம்பிலுள்ள கபம் நீங்கி சுறுசுறுப்பை அடையலாம். ஸ்படிக மாலை முக்தியை நோக்கி அழைத்து செல்லும். ருத்ராட்சம், தாமரை போன்ற மணிகள் அறிவையும், அருளையும் பெறுவதற்கு துணை செய்யும்.
 
சங்கு, தங்கம், இரத்தினம், முத்து போன்றவற்றால் செய்யப்பட்ட மாலைகளில் ஜெபம் செய்தால் நமது விருப்பங்கள் உடனடியாக நிறைவேறும். ஆனால், எல்லாவற்றையும் தருகின்ற துளசி, ருத்ராட்சம், ஸ்படிகம் போன்ற மாலைகளே முதல் தரமானவைகள்.
 
தீர்த்தங்களில் மிக புனிதமானதாக கங்கை நீர். கங்கை இந்திய தேசத்தின் பல  பகுதியை புனிதப்படுத்தி இறுதியில் சமுத்திரத்தில் சங்கமிக்கிறாள். கங்கையும் சரி, கங்கையை போன்ற மற்ற புனித நதிகளும் சரி. கடைசியில் சென்று சேருகிற இடம் கடல் தான். அதனால் தான் தீர்த்தங்களில் மிக புனித தீர்த்தங்களாக கடல்  தண்ணீர் சொல்லப்படுகிறது. கடல் நீரை தெளிக்கும் இடத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் உடனடியாக விலகும்.
 
எனவே நாம் ஜெபம் செய்யும் மாலைகளை, கடல் நீரில் சுத்தப்படுத்தலாம். கடல் நீர் கிடைக்காத போது, கிணற்று நீரில் உப்பு கரைத்து, அதிலும் சுத்தப்படுத்தலாம்.  உப்பு நீரில் சுத்தப்படுத்தினால் கண்டிப்பாக பால், மஞ்சள் நீர் போன்றவற்றிலும் அதன் பிறகு சுத்தப்படுத்த வேண்டும். பஞ்ச கவ்வியத்தில் சுத்தி செய்வது மிகவும்  நல்லது. ஜெபத்திற்கு முன்னும் பின்னும் அந்த மாலைகளுக்கு தூப தீபம் காட்டுவது அதனுடைய புனித தன்மையை இன்னும் அதிகப்படுத்தும்.
 
நூற்றி எட்டு எண்ணிக்கை உள்ள ஜெபமாலைகள் ஜெபம் செய்வதற்கு மிகவும் உகந்ததாகும். இது தவிர, ஜன வசியம் ஏற்பட, அறுபத்தி நான்கு மணிகளும், நமது  பிரார்த்தனைகள் இஷ்ட தேவதைகளை சென்றடைய, ஐம்பத்திரண்டு மணிகளும், எதிரிகளை வெற்றியடைய நாற்பது மணிகளும், தன லாபம் கிடைக்க முப்பது மணிகளும், பகைமை என்பதே இல்லாமல் செய்ய, இருபத்தி ஏழு மணிகளும் ஜெப மாலைகளில் வைத்து ஜெபம் செய்யலாம்.
 
பொதுவாக ஜெப மணிகளை உருட்டி தியானம் செய்கிற போது, மோதிர விரலையும், கட்டை விரலையும் பயன்படுத்தி உருட்ட வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் ஆட் காட்டி விரலை, மணி உருட்ட பயன்படுத்த கூடாது. இந்த மாதிரியான விஷயங்களை கவனத்தில் வைத்திருக்க வேண்டும். இவைகளை மட்டும்  கவனத்தில் கொண்டால் போதும் என்று நினைத்து, மன ஒருநிலைப்பாட்டை மறந்து, தியானம் செய்யக் கூடாது.