ஞாயிறு, 15 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

திருவாதிரை விரதம் இருக்கும் முறைகளும் பலன்களும்....!!

திருவாதிரை நோன்பு என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை  வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. 

சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை #ஆதிரையின் முதல்வன் என்றும்  ஆதிரையான் என்றும் கூறுவர். மார்கழி மாதம் தக்ஷிணாயனத்தின் கடைசி மாதமாகும். தேவர்களுக்கு இது அதிகாலைப் பொழுதாகும்.
 
இந்த காலத்தை தேவர்களுக்கு பிரம்மமுகூர்த்தம் என அழைக்கப்படும். இவ்வேளையில் தில்லையில் குடிகொண்டு அருள்புரியும் எம்பெருமான் நடராஜனைக் காண தேவர்கள் கூடுவதாக ஐதீகம். 
 
இந்நாளிலேயே இறைவன் நடராஜப்பெருமான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்து நடனம் ஆடிக் காண்பித்தார். அது மட்டுமின்றி இதே நாளில் தான், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார். 
 
மார்கழி திருவாதிரை நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூச வேண்டும். சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி  அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காணவேண்டும்.
 
சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திரு வாசகத்தை பக்தியுடன் படிக்கவேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.

இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடரவும் செய்யலாம். ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்பது நம்பிக்கை. 
 
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்களின் சேர்க்கையாக இந்த உலகம் இருக்கிறது. இந்த ஐந்துக்கும் உரிய இடங்களாக சிதம்பரம் (ஆகாயம்), திருவண்ணாமலை (நெருப்பு), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (நிலம்) ஆகியவை. இதில் முதன்மையான  ஆலயத்தில் சிதம்பரத்தில் நடராஜன் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர் என்பது ஐதீகம்.