செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By
Last Updated : வியாழன், 30 மே 2019 (13:40 IST)

கரூர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா

கரூர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
தமிழக அளவில் கரூர் மாரியம்மன் ஆலய கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவானது மிகவும் பிரபலம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். மேலும், தமிழகத்தில் உள்ள மாரியம்மன் ஆலயங்களிலேயே கரூர் மாரியம்மன் ஆலயம் என்றால் தெரியாதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும், அப்பெயர் பெற்ற கரூர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா இன்று நடைபெற்றது. கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த 12ம்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. 
 
17 ம் தேதி பூச்சொரிதல் விழாவும், 19 ம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சிக்குப் பின்னர் தினமும் காலை பல்லக்கு அலங்காரம், இரவு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதிஉலா நடைபெற்று வருகிறது. தினமும் ஏராளமான பெண்கள், பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு  வந்தனர். 27-ம்தேதி தேர்த்திருவிழாவும், இதனை தொடர்ந்து., ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம் எடுத்தும் அக்னி சட்டிஎடுத்தும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திகடனை நிறைவேற்றினர். 
 
இந்நிகழ்ச்சியின் முக்கிய விழாவான கம்பம் ஆற்றில் விடும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கரூர் மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் விக்ரமன், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், முன்னதாக கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தயிர்சாதம் படையலிட்டு கம்பம் எடுக்கப்படும்.

பின்னர் வழிநெடுக பக்தர்கள் தரிசனத்திற்குப் பின்னர் அமராவதி ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள அகழியில் விடப்பட்டது. மேலும், இந்த விழாவினையொட்டி இன்று கரூர் மாவட்டத்திற்கு அரசு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.