பகவான் ராமகிருஷ்ணரின் ஆன்மிக துளிகள்!

இறைவன் திருநாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் எவனுக்கு மயிர்க்கூச்செடுத்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுமோ அவனுக்கு அது தான் கடைசிப் பிறவி.
படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர் படகினுள் நுழையக் கூடாது. மனிதன் உலகத்தில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவனிடத்தில் இருக்கக்  கூடாது.
 
சம்சார வாழ்க்கையில் இருந்தால் என்ன? அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணம் செய்து அவனிடம் சரணமடைந்து விடு. அதன் பிறகு உனக்கு எவ்விதக் கஷ்டமும் இருக்காது. யாவும் அவனது அருளாலே நடை பெறுகிறது என்பதை அறிவாய்.
 
காந்த ஊசி எப்போதும் வடக்குத் திசையையே காட்டுமாதலால் கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப் போவதில்லை. மனிதனுடைய மனம் இறைவனை  நாடியிருக்கும்வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய கடலில் திசை தப்பிப்போக மாட்டான்.
 
வீடு கட்டும் போது சாரம் அவசியம். ஆனால் வீடு கட்டி முடித்து விட்டால் சாரத்தைத் தேடுபவர் யாருமில்லை. அது போல ஆரம்பத்தில் உருவ வழிபாடு  அவசியமாக இருக்கிறது. பின்னர் அவசியமில்லை.
 
ஒருவர் சிரமப்பட்டு விறகும் பிறவும் தேடி நெருப்பு உண்டாக்குகின்றார். அதன் உதவியால் பலர் குளிர் காய்கின்றனர். அது போல மிகவும் சிரமப்பட்டுத் தவம் செய்து இறைவனை அடைந்த மகான்களோடு பழகுவதால் பலர் இறைவனிடத்தில் சுலபமாக மனத்தை வைக்க முடிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :