செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (10:02 IST)

வெள்ளி கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாட்டு சிறப்புக்கள் !!

Pradosham
ஈசனையும் நந்தியையும் அர்ச்சிக்க உகந்தவை வில்வ இலைகள். அந்த வில்வ இலைகளைக் கொண்டு பிரதோஷ நாளில் வழிபட வேண்டும். 'த்ரிஜன்ம பாப சம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்' என்கிறது வில்வாஸ்டகம்.


அதாவது 'மூன்று ஜன்மங்களில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் ஒரு வில்வ இலையை பக்தியோடு பரமனுக்குப் படைப்பதன் மூலமே தீர்ந்துவிடும்' என்பது இதன் பொருள். 'ஈசன், வில்வ இலைகளையும் வில்வக் காடுகளையும் விரும்புகிறவன்' என்று புராணங்கள் கூறுகின்றன.

வில்வம் அன்னை மகாலட்சுமியின் அம்சம். பாற்கடலில் அன்னை மகாலட்சுமி அவதரித்தபோது, அவரின் திருக்கரங்களில் வில்வ இலை இருந்தது என்று வராக புராணம் சொல்கிறது.

வில்வ இலைகள், 'இச்சா சக்தி', 'கிரியா சக்தி', 'ஞான சக்தி' ஆகியவற்றைத் தன்னுள்ளே கொண்டவை. சௌபாக்கிய சஞ்சீவினி என்னும் நூலும், காளிகா புராணமும் மகாலட்சுமித் தாயார் வில்வக் காட்டில் தவம் செய்பவள் என்று சொல்கின்றன. எனவே வில்வத்தில் அன்னை மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்றே நம்பப்படுகிறது.

பிரதோஷம் வரும்  மாதம், கிழமை ஆகியனவற்றைக்கொண்டு அதை வகைப்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் ஒரு தனிச் சிறப்பும் பலனும் கூறப்படுகிறது.  இன்று நிகழும் பிரதோஷம், 'சுக்ர வார பிரதோஷம்' என்று போற்றப்படுகிறது. சுக்ரன் என்றால் வெள்ளி. வெள்ளிக்குரிய இந்த நாளில் வரும் பிரதோஷம் ஆதலால் சுக்ரவாரப் பிரதோஷம் எனப்படுகிறது.