1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 23 மே 2022 (18:25 IST)

எண்ணியது நடக்க அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடு !!

சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும் இருப்பவர் பைரவர். பன்னிரண்டு ராசிகள், அஷ்ட திக்குகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள் என எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆதி தெய்வம் பைரவர்.


காசி நகரமே பைரவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், அதனால்தான் அங்கு இறப்பவருக்கு மோட்சம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது. நீலநிற மேனியரான பைரவர் பாம்பை முப்புரி நூலாகத் தரித்தவர். மண்டை ஓட்டு மாலை அணிந்தவர். சூலம், பாசம், மழு, கபாலம் ஏந்தியவர். திருமுடியில் பிறைநிலவு சூடியவர். பிரம்ம சிரச்சேதர், க்ஷேத்திரபாலகர், வடுகர், ஆபத்துதாரணர், காலமூர்த்தி, கஞ்சுகன், திகம்பரன் என்று பல திருப்பெயர்கள் பைரவருக்கு இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும்.

ஏழரைச் சனி, அஷ்டமச்சனி யாவும் பைரவரை வணங்கினால் நன்மையாக முடியும். தாமரை, வில்வம், தும்பை, செவ்வந்தி, சந்தன மாலைகள் பைரவருக்கு விருப்பமானவை. பரணி நட்சத்திரத்தில் பைரவர் அவதரித்தார். எனவே அந்த நட்சத்திரக்காரர்கள் இவரை வணங்கினால் நல்லது. பைரவருக்கு நள்ளிரவு பூஜையே உகந்தது எனப்படுகிறது. எனினும் உச்சி காலம் எனப்படும் நண்பகல் பூஜை சிறப்பானது.

அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு  ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டும்.

எலுமிச்சம்பழத்தை பைரவமூர்த்தியின் காலில் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு கொண்டு போனால் தீராத வியாதிகள் தீரும். வீட்டை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியும். கெட்ட அதிர்வுகள் விலகும் என்று சொல்லப்படுகிறது.

மன அமைதியே இல்லாதவர்களுக்கு பைரவரே நல்ல துணை. செல்வவளம் பெருக சொர்ணாகர்ஷன பைரவரை வணங்கலாம். எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.