செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

மோட்ச தீபம் யாருக்காக யார் ஏற்றவேண்டும்...?

மோட்ச தீபம் ஏற்றும் முறைகள் பற்றி நம்முடைய பழைமையான நூல்களில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. மாலை சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்னர் ஏற்றப்பட வேண்டும். அதாவது, மாலை 6 மணிக்கு முன்பு. இருள் சூழும் முன்னரே மோட்ச ஒளி தெரிய வேண்டும். 

விளக்குகள் (மண்), தூய பருத்தித் துணி, வாழை இலை, பச்சைக் கற்பூரம், சீரகம், பருத்திக்கொட்டை, கல் உப்பு, மிளகு, நவ தானியங்கள், கோதுமை, நெல் (அவிக்காதது), முழு துவரை, முழு பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, முழு வெள்ளை மொச்சை, கருப்பு எள், முழு கொள்ளு, முழு கறுப்பு உளுந்து ஆகிய  பொருள்களைக் கொண்டு மோட்ச தீபம் ஏற்றப்பட வேண்டும். 
 
பருத்தித் துணியில் மேற்கண்ட பொருள்களை மூட்டையாகக் கட்டி, அதன் முடிச்சை ஒரு திரிபோல் செய்து, விளக்கிலுள்ள எண்ணெயில் போட வேண்டும். பிறகு ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

வாழை இலை விரித்து அதன்மீது நவதானியங்கள் பரப்பி  அதன்மீதே மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஐதிகம். ஏற்றப்படும் மோட்ச தீபம், மேல்நோக்கி எரிய வேண்டும். அதற்குத்தான் திரி மூட்டையாகக் கட்டப்பட்டு விளக்கின் நடுவில் வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. 
 
இந்தத் தீபத் தோற்றம் சிவலிங்கம்போல இருக்கும். விளக்கு ஏற்றியவுடன் பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். ஒருவேளை, பெருமாள் ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம் சொல்லலாம். அப்போது இறந்துபோன ஜீவனுக்காக, அதன் மோட்சத்துக்காக வேண்டிக்கொள்ளலாம். 
 
இரவு முழுவதும் நின்று எரியும் மோட்ச தீபத்தைக் காலையில் குளிர வைத்துவிட வேண்டும். பின்னர், இந்தத் தீபப் பொருள்களை ஏதேனும் நீர்நிலையில் சேர்த்துவிட வேண்டும். மோட்ச தீபம் மற்றவருக்கு மட்டுமல்ல நாம் வாழும் நாள்களில் நமக்காகக்கூட ஏற்றிக்கொள்ளலாம் என்று ஞானநூல்கள் தெரிவிக்கின்றன.