வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (17:45 IST)

சீரடி சாய் பாபா நிகழ்த்திய அற்புதங்களில் சிலவற்றை பார்ப்போம் !!

மகாராஷ்டிரா மாநிலம் சீரடியுள்ள துவாரகாமாயீ என்ற மசூதியில் சாய்பாபா வசித்து வந்தார்.


தினம் தோறும் மாலை வேளையில் மசூதியில் விளக்கேற்றுவதை சாய் பாபா வழக்கமாக கொண்டிருந்தார். விளக்கேற்றுவதற்காக எண்ணெய்யை அருகில் உள்ள கடைகளில் அவர் பெற்று வந்தார்.

ஒவ்வொரு நாளும் ஒரு கடை என அங்குள்ள அனைத்து கடைகளிலும் அவர் எண்ணெய்யை பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடைக்காரர்களுக்கு புண்ணியம் வந்து சேரவேண்டும் என்பதற்காக பாபா காசு கொடுத்து எண்ணெய் வாங்குவது கிடையாது. ஆனால் கடைக்காரர்கள், பாபாவின் நல்லெண்ணத்தை புரிந்துகொள்ளாமல் தவறான முடிவை எடுத்துவிட்டனர்.

சாய் பாபா நிகழ்த்திய அற்புதம்: ஒருநாள் அந்த கடைக்காரர்கள் அனைவரும் இனி பாபாவிற்கு எண்ணெய் கொடுக்க கூடாது என்று முடிவெடுத்தனர்.  அடுத்த நாள் வழக்கம் போல ஒரு கடையில் வந்து பாபா எண்ணெய் கேட்கிறார். ஆனால் அந்த கடைக்காரர் வழக்கத்திற்கு மாறாக எண்ணெய்யை தர மறுக்கிறார். அடுத்தடுத்த கடைகளிலும்  பாபா எண்ணெய் கேட்கிறார். ஆனால் அனைத்து கடைக்காரர்களும் இல்லை என்ற ஒரே பதிலையே கூறுகின்றனர். பாபா சிரித்தபடியே மீண்டும்  மசூதிக்கு திரும்புகிறார்.

இவ்வளவு நாள் ஓசியில் எண்ணெய் வாங்கி இவர் விளக்கேற்றினாரே இன்று என்ன செய்யப்போகிறார் என்பதை அறிய கடைக்காரர்கள் பாபாவை பின்தொடர்ந்தனர். அப்போது தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. மசூதியில் இருந்த பழைய எண்ணெய் டப்பாவை எடுத்தார் பாபா. அதில் தண்ணீரை ஊற்றி நிரப்பினார்.

பின் அந்த தண்ணீரை தன் வாயில் ஊற்றி அதை மறுபடியும் எண்ணெய் டப்பாவில் நிரப்பினார். பின் அதை கொண்டு தீபம் ஏற்றினார். தீபம் பிரகாசமாக எரிந்தது. கடைக்காரர்கள் தங்கள் செயல்களால் வெட்கி தலைகுனிந்து பாபாவின் மன்னிப்பு கேட்டனர். இப்படி பல அற்புதங்களை பாபா சீரடி மக்களிடையே நிகழ்த்தி காட்டியுள்ளார்.