சூரியனை வழிபடுவதால் கிடைக்கும் நற்பலன்கள் பற்றி தெரிந்துகொள்வோம்...!!
சூரியன், ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒவ்வொரு நிறத்தில் காட்சி தருகிறார். வசந்த காலத்தில் தங்க நிறத்திலும், வெயில் காலத்தில் செண்பகப்பூ நிறத்திலும், மழைக்காலத்தில் வெண்மை நிறத்திலும், கார்காலத்தில் கருமை நிறத்திலும், முன்பனிக் காலத்தில், தாமரை நிறத்திலும், பின்பனிக் காலத்தில் சிவப்பு நிறத்திலும் விளங்குவதாக வேதங்கள் கூறுகின்றன.
சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய 'காலம்' என்ற ஒற்றைச் சக்கர தேரில் பவனி வருபவராக புராணங்கள் கூறுகின்றன. இந்த ரதத்தை ரதசப்தமியன்று விஷ்ணு சூரியனுக்கு அளித்தார். ரத சாரதியாக காசியப முனிவரின் மகனான அருணன் விளங்குகிறார்.இவருக்கு இடுப்புக்குக் கீழே அங்கங்கள் கிடையாது. வைரோஜன யோகத்தில் ரதத்தைச் செலுத்தி, சூரிய பகவானுக்கு உறுதுணையாக இருக்கிறார்.
சூரிய ரதத்தின் ஏழு குதிரைகளை காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்று அழைப்பர். இவை, வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றன.
ஸ்ரீ மகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கு சங்கும், சக்கரமும் உண்டு. அதனால் வைஷ் ணவர்கள் சூரியனை "சூரியநாராயணன்" என்று போற்றுகின்றனர். சிவ ஆகமங்களில் சூரிய மண்டலத்தின் நடுவே சிவபெருமான் உறைந்திருப்பதாக கூறுகின்றன. சூரியன் சிவனின் அஷ்ட மூர்த்தங்களில் ஒருவராகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார். அதனால் தான் சைவர்கள் "சிவசூரியன்" என்று போற்றுகின்றனர்.
சூரியனின் தேர் தெற்கில் பயணிக்கும் காலத்தை தட்சிணாயனம் என்றும், வடக்கு நோக்கி பயணிக்கும் காலத்தை உத்ராயணம் என்றும் கூறுவர். தைமாதம் சூரியனின் தேர் பாதை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாறும் அன்றைய நாளுக்கு "ரதசப்தமி" என்று பெயர். அன்று சூரியனை வழிபட்டால், சகல சௌபாக்கியங்கள் கிட்டும்.
ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி உலகின் நலனைக் கருதி ராவணனை வெல்ல முனைந்தபோது ஸ்ரீ ராமனுக்கு கவசமாக, பாதுகாப்பாக, ஆதித்ய ஹ்ருதயத்தை அகஸ்தியர் உபதேசித்தார்.
வேதியர்கள் தினமும் ஓதும் காயத்ரி மந்திரம் சூரியனுக்குரியதே. ஆதித்ய ஹ்ருதயமும் காயத்ரி மந்திரமும் நமக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் அறிவுத் திறனையும் வாழ்வில் வெற்றியையும் கொடுக்கக் கூடியவையாகும்.