துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெற சங்கடகர சதுர்த்தி வழிபாடு...!

சங்கடகர சதுர்த்தி என்பது விநாயகரை விரதமிருந்து வழிபாடு செய்யும் முறை ஆகும். மாதந்தோறும் பௌர்ணமியை அடுத்து வரும் நான்காவது நாளான சதுர்த்தியில் (தேய்பிறை சதுர்த்தி) இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
சங்கடகர என்பதில் உள்ள “கர” என்பதற்கு நீக்குதல் என்றும், சங்கடகர என்பதற்கு துன்பங்களை நீக்குதல் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. இவ்விரத வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் தங்களுடைய வாழ்வியல் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் அடைவதாக  கூறப்படுகிறது.
 
இவ்வழிபாடானது மிகவும் பழமையானது மற்றும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் முறைகளில் முக்கியமானது ஆகும். இவ்விரதத்தினை தொடர்ந்து மேற்கொள்வதால் காரியத்தடை, திருமணத் தடை, நீண்ட நாள் நோய் ஆகியவை நீங்கும். நீண்ட ஆயுள், புத்தி  கூர்மை, நிலையான செல்வம், நன் மக்கட் பேறு, சந்தோசம் ஆகியவை கிடைக்கும் என்று கருதப்படுகிறது. 
 
சங்கடகர சதுர்த்தி: புராணக் கதை:
 
ஒரு முறை விநாயக பெருமான் தனது வாகனமான மூஞ்சுறுவுடன் ஆனந்த நடனம் செய்தார். அவருடைய உடல் அமைப்பு, நடனம், வாகனம் ஆகியவற்றை சந்திரன் எள்ளி நகையாடினான். இதனால் சினமுற்ற விநாயகப் பெருமான், சந்திரன் தனது ஒளியை இழக்குமாறு சாபமிட்டார்.
 
தன் தவற்றினை உணர்ந்த சந்திரன் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு மீண்டும் பழைய நிலையை அடைவதற்கு வழி கேட்டான். அதற்கு விநாயகப் பெருமான் ஆவணி மாத தேய்பிறை சதுர்த்தியில் தன்னை நினைத்து விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்தால் பழைய நிலையை  அடையலாம் என்று கூறினார். சந்திரனும் அவ்வாறே வழிபாடு செய்து தன் இன்னல் நீங்கப்பெற்று பெரு வாழ்வு பெற்றான். அப்போது முதல்  இவ்வழிபாடு தோன்றியது என ஒரு கதை உண்டு.
 
தாண்டகாவனம் என்ற காட்டில் விப்ரதன் என்னும் வேடன் வசித்து வந்தான். அவன் கொலை, கொள்ளை ஆகிய கொடுஞ்செயல்களைச் செய்து  வந்தான். ஒரு நாள் அக்காட்டின் வழியே வந்த முத்கலர் என்ற முனிவரை தாக்க முற்பட்டான். அவர் தனது சக்தியால் அவனை செயல்  இழக்கச் செய்தார்.
 
வேடனோ நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு தன்னை நல்வழிப்படுத்தவும் வேண்டினான். அதற்கு அவர் விநாயக பெருமான்  மந்திரத்தையும், சங்கடகர சதுர்த்தி விரத முறையையும் கூறி, இன்னல்கள் நீங்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டினார். அவ்வேடனே இவ்விரத முறையைப் பின்பற்றி விநாயகப் பெருமான் அருள் பெற்று புருசுண்டி என்ற முனிவர் ஆனார். புருசுண்டி முனிவர் பூலோக மக்கள் தங்கள்  துயரங்கள் நீங்கி நல்வாழ்வு பெற இவ்விரத மகிமையை கூறி மக்களைக் கடைப்பிடிக்கச் செய்தார் எனவும் ஒரு கதை உண்டு
 
கிருஷ்ணர் வளர்பிறை நான்காம் நாள் சந்திரனைப் பார்த்ததன் விளைவாக, சியமந்தக மணியால் பெரும் அவமானத்திற்கு உள்ளானார். அவர் சங்கடகர சதுர்த்தி விரதம் மேற்கொண்டு விநாயக பெருமானை வழிபட்டு தேய்பிறை நான்காம் நாள் சந்திரனைப் பார்த்து தனக்கு ஏற்பட்ட  அவப்பெயரை போக்கியதாகவும், அன்று முதல் இவ்வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :