வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 4 ஜனவரி 2022 (10:13 IST)

முருகப்பெருமானுக்கு எங்கெல்லாம் குடவரை கோவில்கள் உள்ளது தெரியுமா....?

தமிழ்க் கடவுள் முருகன் என்று அனைவராலும் போற்றப்படுபவர், முருகப்பெருமான். அவர் ‘குறிஞ்சி நிலக் கடவுள்’ என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்து தூய்மையுடன், ‘ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம்’ ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.
முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வஜ்ஜிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறுகரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.
 
தீப்பொறியாக உருவான முருகப்பெருமான், முதலில் கங்கையால் தாங்கப்பட்டார். இதனால் ‘காங்கேயன்’ என்று பெயர் வந்தது. சரவணப் பொய்கையில் உருப்பெற்றார். எனவே ‘சரவண பவன்’ ஆனார். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் ‘கார்த்திகேயன்’ என்றும், பார்வதிதேவியால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் ‘கந்தன்’ என்றும் பெயர் கொண்டார்.
 
தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு, குடவரைக் கோவில்கள் உள்ள இடங்கள் சில இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம் ஆகியவை.
 
முருகனுக்கு உருவமில்லாத கோவில், விருத்தாசலத்தில் உள்ளது. இத்தல முருகனின் பெயர் ‘கொளஞ்சியப்பர்.’ அருவுருவ நிலை பிரார்த்தனை தலம் என்று இதனைக் கூறுவார்கள். 
முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதிலாக படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலை கொண்ட முருகப்பெருமான் கோவில் இருக்கிறது.
 
முருகனுக்கு ‘விசாகன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. ‘விசாகன்’ என்றால் ‘மயிலில் சஞ்சரிப்பவன்’ என்பது பொருளாகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால், இப்பெயர் வந்ததாகவும் சொல்வார்கள்.