தர்ப்பணம் செய்யும் முன்பாக கவனத்தில் கொள்ளவேண்டியவைகள்...!
தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.
சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.
நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.
ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.