1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஜோதிட ரீதியாக ஓரைகள் எனப்படுவது என்ன? அவற்றில் சுப காரியங்கள் செய்வது சரியா?

ஒவ்வொரு மாதமும் தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதைத்தான் அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை என்று  சொல்வர்.

 
எந்தக் கிழமையில் சூரிய உதயம் ஆகிறதோ, அந்தக் கிழமைக்கு உரிய கிரகமே சூரிய உதய முதல் ஒரு மணி நேரத்துக்கான ஓரைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறது. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றுக்கு ஓரைகள் இல்லை. மாறாக ராகு  காலம் என தனிக் காலம் உண்டு.
 
சூரிய ஓரை: விண்ணப்பம் செய்ய, அதிகாரிகளை சந்தித்தல், மருந்துண்ணல், சொத்துப் பிரிவினை செய்தல், வேலைக்கு  முயற்சித்தல், அரசு அனுமதி பெறுதல், பதவி ஏற்றிடல் ஆகியன செய்யலாம்.
 
சந்திர ஓரை: திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கல்வி கலை கற்றிட ஆரம்பித்தல்,  தொலைதூரப் பயணம் தொடங்குதல், கால்நடைகள் வாங்குதல் நலம் தரும்.
 
செவ்வாய் ஓரை: போர்க்கருவிகள் செய்தல், வாகனங்கள் பழுது பார்த்தல், போர் தொடுத்தால், வீடு மனை நிலம் வாங்குதல், விற்றல், மருந்துண்ணல், ஏரிக்கரை அல்லது அணை கட்டுதல் செய்யலாம். சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
 
புதன் ஓரை: ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், போட்டி பந்தயங்களில் பங்கேற்றல், கடிதத் தொடர்பு கொள்ளுதல், புதிய பொருள்களை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல் செய்யலாம்.
 
குரு ஓரை: புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், அணிதல், சேமிக்கத் தொடங்குதல், வர்த்தகக் கொள்முதல் செய்தல், விதை விதைத்தல், நாற்று நடுதல், குரு உபதேசம் செய்தல், பெரியோர்களை சந்தித்து ஆசி பெறல் ஆகியவற்றுக்கு ஏற்ற காலம்.
 
சுக்கிர ஓரை: கலைகளைக் கற்கத் தொடங்குதல், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தல், காதல் புரிதல், மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் செய்யலாம்.
 
சனி ஓரை: உழுதல், எருவிடுதல், இரும்பு, மின்சாதனங்களை வாங்குதல், தோப்பு துரவு (கிணறு) அமைத்தல், பயணம் செய்தல்  போன்றவை செய்யலாம்.
 
சந்திராஷ்டமம்: நம் ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொருவருடைய ஜனன கால ஜாதகமும் சந்திரனை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது. அதாவது ஒருவர் பிறந்த போது சந்திரன் எந்த ராசியில் இருக்கிறதோ, அதுவே அவரது ஜனன ராசி என்றும்,  சந்திர லக்கினம் என்றும் கூறப்படுகிறது.