மார்கழி மாத திருவாதிரை தினத்தில் சிவபெருமானின் ஆருத்ரா தரிசனம் !!
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் வாயிலாக உலகை அவன் இயக்கச் செய்து திருநடனம் அருளுகின்றான். அவனின் ஒவ்வொரு அசைகின்ற அசைவினால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பது புராணங்களே எடுத்துரைக்கின்றன.
சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருக்கிறார். அவற்றுள் 48 நடனங்கள் ஈசன் தனியாக ஆடியது. இந்நடனங்களில் மிக சிறப்பு வாய்ந்த நடனம் திருவாதிரைத் திருத் தினத்தன்று சிவபெருமான் ஆடிய தாண்டவமாகும்.
தில்லை கொண்ட சிதம்பர நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தில் நடராஜர் நடன கோலத்தில் காட்சியளிப்பது “ஆருத்ரா தரிசனம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் தில்லை நடராஜரின் திருநடனத்தை காண்பதற்கு கோடிக்கண்கள் போதாது.
மார்கழி மாதம் என்பது தேவலோகத்தவர்களுக்கு வைகறை அதாவது அதிகாலை பொழுதாகும். இந்த நேரத்தில் காலைக் கடன்களை முடித்து நீராடி, இறைவனை தரிசிப்பது சிறப்பு வாய்ந்தது. எனவேதான் மார்கழி மாதத்தில் நடைபெறுகின்ற திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தைக் காண தேவ லோக தேவர்கள் அனைவரும் சிதம்பர நகருக்கு வருவார்கள்.
ஆருத்ரா என்றால் நனைக்கப்பட்டவை எனப் பொருள். பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாதர் ஆகிய இருவரும், திருவாதிரை திருத் தினத்தில் சிவபெருமான் ஆடிய நடனத்தை காண வேண்டுமென்பதற்காக தவத்தை மேற்கொண்டனர். இவர்களின் தவத்திற்கு பணிந்த ஈசன், தில்லையில் மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்று தனது திருநடனத்தைக் காட்டி, கருணையால் இரு முனிவர்களையும் நனைத்த நிகழ்வே ஆருத்ரா தரிசனமாகும்.