வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பிதுர்பூஜை செய்வதற்கு உகந்த ஆடி அமாவாசை !!

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறான். கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற வீடு. சூரியன் சிவ அம்சம், ஆடி அமாவாசையின் போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது. ஆகவேதான், ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கூறப்பட்டுள்ளது.

பொதுவாகவே, ஆடி மாதம் சுப காரியங்கள் தவிர்க்கப்படும் மாதம். என்றாலும், ஆடி அமாவாசைக்குப் பிறகு சுப காரியங்கள் செய்யலாம் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஏனெனில், சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாதத்தைக் கணக்கிடும்போது, ஆடி அமாவாசையோடு ஆஷாட மாதம் முடிந்து, அதன்பிறகு மங்களகரமான காலமாகக் கூறப்படுகிறது. அப்போது நல்ல காரியங்களைச் செய்யலாம்.
 
ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை தை அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை. (சூரியன் வடக்கு நோக்கி சஞ்சரிக்கும் உத்தராயன காலத்தின் தொடக்கத்தில் வருவது தை அமாவாசை) ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசையாகும். 
 
ஜோதிட சாஸ்திர கணக்கின்படி வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை, தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை. மேற்சொன்ன கடக ராசியும், மகர ராசியும் நீர் ராசிகள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது. 
 
அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன. அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன அதிலும் ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே அன்று புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும் மேலும் நம்முடன் வாழ்ந்த காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.