திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

12 ஜோதிர்லிங்கங்கள் அமைந்துள்ள திருத்தலங்கள்...!!

சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள், ஜோதிர்லிங்கங்கள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இதற்கு ‘ஒளிமயமான லிங்கம்’ என்பது பொருளாகும். இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க திருத்தலங்கள் உள்ளன. 

திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை ஜோதிர்லிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே திருவாதிரை நாளில்  ஜோதிர்லிங்கத்தை வணங்குவது சிறப்புக்குரியதாக சொல்லப்படுகிறது.
 
பீமசங்கரம்: மகாராஷ்டிரா மாநிலம் புனேனவில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பீமசங்கரர் திருக்கோவில். பொதுவாக எல்லா  சிவன்கோவில்களிலும் மூலவரின் கருவறைக்கு முன்பாக நந்தி சிலை இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் நந்திக்கு பதிலாக ஆமை உருவம் வடித்து  வைக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.
 
ஸ்ரீசைலம்: ஆந்திரா மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனேஸ்வரர் திருக் கோவில். கர்நூல் மாவட்டம் நந்தியாவில் இருந்து 70  கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது. இங்கு நந்தியே மலையாக இருந்து சிவ பெருமானை தாங்குவதாக தல புராணம் தெரிவிக்கிறது. மேலும்  விநாயகப்பெருமான், சித்தி-புத்தி ஆகிய இருவரையும் மணம் செய்த சிறப்புமிக்க தலம் இதுவாகும்.
 
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ராம நாதர் ஆலயம் உள்ளது. 12 ஜோதிர்லிங்கங் களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஆலயம் இது. இங்குள்ள  இறைவனுக்கு கங்கை நீரை கொண்டு வந்து அபிஷேகிப்பது வழக்கம். இந்த தலத்தில் மட்டும், கடலில் எப்போது வேண்டுமானாலும் நீராடலாம்.
 
கேதர்நாத்: உத்திரபிரதேச மாநிலம் கேதர்நாத்தில் உள்ளது கேதாரேஸ்வரர் திருக்கோவில். இமயமலையில் உள்ள சுயம்புவாக உருவான பனி லிங்கம் இதுவாகும்.  அம்பாள், ஈசனின் இடப் பாகத்தைப் பெற்ற தலம் இது என்று கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் 6 மாத காலம் மானிட பூஜையும், 6 மாத காலம் தேவ பூஜையும் நடைபெறுகின்றன. தேவ பூஜை நடைபெறும் காலத்தில் இந்த ஆலயம் நடைசாத்தப்படும்.
 
காசி: சிவபெருமானின் விருப்பத்திற்குரிய திருத்தலம் என்று அழைக்கப்படுவது வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவில். இங்கு இறப்பவர்களுக்கு,  சிவபெருமானே தாரக மந்திரம் ஓதுவதாக ஐதீகம். இத்தல இறைவனுக்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம்.
 
சோமநாதம்: குஜராத் மாநிலம் சோமநாதம் நகரத்தில் உள்ளது பிராபாச பட்டினம். இங்குதான் சோமநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இது ஒரு கடற்கரைத்  தலமாகும். சந்திர பகவானின் சாபம் தீர்த்த தலம் இது என்பது சிறப்பு வாய்ந்தது. இந்த ஆலயத்தில் அருளும் இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். 
 
குஸ்ருணேஸ்வரம்: மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்க பாத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், எல்லோரா குகையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் குஸ்ருணேஸ்வரம் உள்ளது. இங்குதான் குஸ்ருணேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இறைவனை, அம்பாள் குங்குமப்பூவால் வழிபட்ட தலம் இதுவாகும். 
 
சித்த பூமி: ஜார்கண்ட் மாநிலம் தேவ்கர் என்ற இடத்தில் இருக்கிறது வைத்தியநாதர் திருக்கோவில். இதனை சித்த பூமி என்றும் அழைப்பார்கள். திருமாலின் லீலையால், ராவணன் காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கம், தங்கி விட்ட திருத்தலம் இது. 
 
உஜ்ஜைனி: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் சிப்ரா நதிக்கரையில் அமைந்தத் திருத்தலம் மகாகாளர் திருக் கோவில். இந்த ஆலயம் 5 அடுக்குகளைக்  கொண்ட அழகிய ஆலயமாகும். இங்கு கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமியில் வழிபாடு செய்வது விசேஷமான ஒன்று. தோல் வியாதிகளை நீக்கும் கோடி  தீர்த்தம் இந்த ஆலயத்தில்தான் இருக்கிறது.
 
ஓங்காரம்: மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் இருந்து 281 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஓங்காரம். இங்கு ஓம்காரேஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.  அமலேஸ்வரர் என்றும் இவரை அழைப்பார்கள். இது மலை முகட்டில் உள்ள சுயம்புலிங்கமாகும். இந்தத் தலத்தில் இருந்து தான் பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2  ஆயிரம் லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விட்டான். அவையே சாளக்கிராம கற்களாக மாறியதாக வரலாறு.
 
ஓளண்டா: மகாராஷ்டிரா மாநிலம் ஓளண்டா நகரத்தில் உள்ள துவாரகையின் அருகே உள்ளது நாகநாதர் திருக்கோவில். இந்த ஆலயம் ஒரு காட்டுக் கோவிலாகும்.  தாருகாவனம் என்று சொல்லப்படும் காட்டின் பகுதியில் அமைந்திருக்கிறது.
 
திரியம்பகம்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரத்தில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திரியம்பகம் என்ற ஊர். இங்கு திரியம்பகேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் லிங்கம், சுயம்பு லிங்கமாகும். ஆலயக் கருவறையில் இருந்து எப்போதும் நீர் ஊறிக் கொண்டே இருப்பது தனிச் சிறப்பு. இங்கு சிவனே  மலையாக இருப்பதாக ஐதீகம்.