வியாழன், 9 ஜனவரி 2025
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. செல்வன்
Last Modified: வெள்ளி, 7 நவம்பர் 2014 (14:13 IST)

மழை வரி - அமெரிக்கத் தேர்தலில் விந்தைகள்

அமெரிக்க காங்கிரஸ் தேர்தலில் பல விந்தைகள் காணப்பட்டன. சுனாமி நல்லவன், கெட்டவன் எனப் பார்ப்பது கிடையாது. அது போல் ஜெயிக்க வேண்டிய சிலர் தோற்றார்கள், தோற்க வேண்டிய சிலர் ஜெயித்தார்கள்.
 
அபார்ஷனுக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டு, கள்ளக் காதலியைக் கர்ப்பமாக்கி, அவருக்கு அபார்ஷனும் செய்வித்த ஸ்காட் டெஸ்ஜார்லிஸ் (Scott DesJarlais) எனும் ரிபப்ளிக்கன் காங்கிரஸ்மேன், ஒபாமாவின் டெமக்ராடிக் கட்சிக்கு எதிரான அலையில் தப்பிக் கரையேறினார். வரி ஏய்ப்புப் புகாரில் சிக்கி, தோல்வி உறுதி எனும் நிலையில் நியூயார்க்கில் மைக்கேல் க்ரிம் (Michael Grimm) எனும் வேட்பாளர் அதே போல், அலை அடித்ததால் வென்றார்.
 
பில் கிளின்டன் கவர்னராக இருந்த ஆர்கன்சாவில் அவருக்குக் கார் ஓட்டி வந்த மைக்கேல் ராஸ் (Michael Ross) என்பவர், படிப்படியாக முன்னேறி, கவர்னர் பதவிக்குப் போட்டியிட்டார். நல்ல எளிமையான வேட்பாளர், அடித்தட்டு வர்க்கம், பில் கிளின்டனின் சொந்த மாநிலம், அவருக்கு ஆதரவாகப் பல முறை பில் கிளின்டன் செய்த பிரச்சாரம் இப்படி பல விஷயம் சாதகமாக இருந்தும், டெமக்ராடிக் கட்சிக்கு எதிரான அலையில் மைக் ராஸ் தோற்றார்.
 
மேரிலாந்து மாநிலம் வீழ்ந்த கதை சுவாரசியமானது. மேரிலாந்து கவர்னராக இருந்த மார்ட்டின் ஒ மாலி (Martin O'Malley),  ஜனாதிபதி தேர்தலுக்குப் போட்டியிட இருந்தார். அவர் ஓய்வு பெற்றபின் துணை கவர்னராக இருந்த அவரது கட்சியின் அந்தோணி பிரவுன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக ஒபாமா கடும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
டெமக்ராடிக் கட்சியின் கோட்டை என்பதால் வெற்றி உறுதி எனக் கருதப்பட்டது. ஆனால் ஒன்றுமில்லை எனப் பலரும் நினைத்த ஒரு விஷயத்தை முன் வைத்து, எதிரணி வேட்பாளர் லாரி ஹோகன் வெற்றிக் கனியை பறித்துவிட்டார். அது "மழை வரி"
 
மழைக்கு வரியா எனத் திகைக்க வேண்டாம்! ஆம். 
 
கான்க்ரீட் தரைகள், ரோடுகளில் மழைநீர் உள்புகுவது கிடையாது. வெள்ளப் பெருக்காக ஓடி, வயல்களில் இருக்கும் உரம், பூச்சிக் கொல்லி மருந்து எல்லாவற்றையும் சேகரித்து ஆறு, கடலில் சேர்க்கிறது. மழை பெய்ததும் ஓடாமல், அப்படியே தரைக்குள் உறிஞ்சப்படுவது போல் காங்க்ரீட் போடாத வீடுகளுக்கு வரி விதித்தார் மார்ட்டின் ஒ மாலி. 

 
சாதாரணமாகக் காங்க்ரீட் களம் அமைப்பதை விட இப்படி அமைத்தால் மழைநீர் எளிதில் பூமிக்கு உள்ளே சென்றுவிடுமாம். இப்படிப்பட்ட தளங்கள் அமைக்காவிடில் வரி எனச் சொல்லி விதிக்கப்பட்டதே மழை வரி.
 
ஆனால் இப்படி அமைக்கப்பட்ட காங்ரீட் தளங்கள் அரை, கால் சதவிகிதம் கூட தேறாது என்பதால் ஒட்டுமொத்த மக்கள் மேலும் விதிக்கப்ட்ட வரியாக மாறிவிட்டது மழை வரி. வரி போடுகிறார்கள் எனச் சொல்லி, செலவு செய்து காங்ரீட் தளத்தைப் புதிதாகப் போடவும் யாரும் தயாரில்லை. வரி கட்டுவதும் சிரமம், தரையை மாற்றுவதும் சிரமம், அதை விட ஓட்டு போட்டு கவர்னரையே மாற்றிவிட்டால் வரி போய்விடும் என நினைத்து, எதிரணி வேட்பாளருக்குப் பெருமளவில் ஓட்டு போட்டு ரிபப்ளிக்கன் வேட்பாளரை வெற்றி பெற வைத்துவிட்டார்கள் மக்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை, மழைக்கு வரிபோட்டால் அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்?
 
ஒபாமா தேர்தலில் தன் சொந்த கட்சியினரால் பிரச்சாரத்துக்கு வராமல் ஒதுக்கப்பட்டது, அவருக்கு ஓட்டு போட்டதை அவரது கட்சி வேட்பாளர்களே ஒத்துக்கொள்ள மறுத்தது, ஒபாமா பேசுவதைக் கேட்காமல் அவர் கட்சியினரே பாதியில் வெளியேறியது எனப் பல விந்தைகள் இத்தேர்தல் களத்தில் நிகழ்ந்தன.
 
இதன் நீண்ட கால விளைவுகள் என்ன?
 
அடுத்த இரண்டாண்டுகள் ஒபாமா லேம் டக் எனப்படும் சக்தியற்ற அதிபராக மாறுவார். 
 
பொருளாதார மந்த நிலை தொடர்ந்து நீடிக்கும்.
 
இந்தியா,  சீனா, கிழக்காசியா பகுதியில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பெரிதாக மாறாது
 
அமெரிக்க பட்ஜெட்டில் மேலும் துண்டுகள் விழலாம். ஆப்பிரிக்கா முதலிய நாடுகளுக்கு கொடுக்கப்படும் உதவியில் வெட்டுகள் இருக்கலாம்.
 
இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படவிடாமல் ஒபாமாவை ரிபப்ளிக்கன்கள் முடக்கலாம்.
 
புவி வெப்ப மயத்தைப் பற்றி இனி அடுத்த ஐந்தாறு ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. பெட்ரோல், காஸ் துறைகளுக்கு இது நல்லது.
 
எப்படியோ இன்னும் இரு ஆண்டுகளுக்கு அரசியல் காமெடிகள், கலாட்டாக்களுக்குப் பஞ்சம் இருக்காது!